உலக பிரபலமான அமெரிக்காவைச் சேர்ந்த பாடகி டேலர் ஸ்விஃப்ட், சமீபத்தில் தனது புதிய ஆல்பத்தை வெளியிட்டார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், பொது மக்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த டிசம்பர் 10-ம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், டேலர் ஸ்விஃப்ட் இயற்றிய ரெட் (டேலர் வெர்ஷன்) பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. டேலர் ஸ்விஃப்ட் நிகழ்ச்சியில் பங்கேற்காத நிலையில், ரசிகர்கள் மட்டும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். கிட்டத்தட்ட 600 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், 100 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர்கள், தங்களது தொடர்பு விவரங்களை பதிவிட்டிருக்கின்றனர். இதனால், நியூ சவுத் வேலஸ் பகுதியைச் சேர்ந்த சுகாதாரத்துறை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை முதலில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியது. அதனை தொடர்ந்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அதிர்ச்சியாகும் விதமாக கிட்டத்தட்ட 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஒரே நிகழ்ச்சியை சேர்ந்த 100 பேருக்கு கொரோனா பரவி இருப்பதால், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று சற்று குறைந்ததை அடுத்து தற்போது உருமாறிய கொரோனாவாக ஒமிக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. உலக அளவில் இதுவரை 72 நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது நம்மால் கணிக்க முடிந்த அளவு மட்டுமே என்றும், இன்னும் பல நாடுகளில் பரவியிருக்க வாய்ப்புகள் இருக்கிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபாராதம் விதித்தும் ஆஸ்திரேலிய அரசு கடுமையான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்