ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 100 குழந்தைகள் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் பலியான குழந்தைகளில் பலர் ஷியா மற்றும் ஹசராஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல். இதற்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை.
தஸ்த் இ பார்சி என்ற பகுதியில் காஜ் கல்வி நிலையத்தில் தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் பிலால் சார்வரி, நாங்கள் இதுவரை கணக்கு செய்ததில் இருந்து 100 குழந்தைகள் உயிரிழந்தது உறுதியாகி உள்ளது. உயிரிழப்பு இன்னும் அதிகமாகலாம். அங்கே மாதிரி தேர்வு நடந்து கொண்டிருந்ததால் வகுப்பறை முழுவதும் மாணவர்கள் இருந்தனர்.
ஆப்கானிஸ்தானும் தாலிபன்களும் அவலமும்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த, 2021 மே மாதத் தொடக்கத்தில் இருந்து வெளியேறத் தொடங்கின. அப்போதில் இருந்தே ஆப்கானிஸ்தானில் பல மாவட்டங்களை தலிபான் கைப்பற்றத் தொடங்கியது. பின்னர் கடந்த ஆகஸ்டில் ஆப்கானிஸ்தான் முழுமையாக தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதிபர் அஷ்ரப் கனி ஆப்கனில் இருந்து வெளியேறிய நிலையில் தலிபான்கள் வசம் ஆட்சிப் பொறுப்பு சென்றது. இதனைத்தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறினர். எஞ்சியவர்கள் பட்டினி, பசி, நோய், அத்துடன் இதுபோன்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கியுள்ளனர்.
எல்லாவற்றிற்கும் கட்டுப்பாடு:
பெண்களை ஆண் துணையின்றி அதிக தூரம் பயணம் செய்வதைத் தடை செய்திருக்கிறது தாலிபான் அரசு. மேலும் ஹிஜாப் அணிந்திருக்கும் பெண்களுக்கு மட்டுமே ஆண்கள் தங்களது வாகனங்களில் இடம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 45 மைல்களுக்கு அதிகமாகப் பயணம் செய்யும் பெண்கள், நெருங்கிய ஆண் துணையின்றி தனியே வந்திருந்தால் அவர்களுக்கு வாகனங்களில் இடம் கொடுப்பது தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட வரவேண்டியது நெருங்கிய ஆண் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது இன்னொரு நிபந்தனை. பெண் கலைஞர்கள் பங்குபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்தது.
பெண் ஊடகவியலாளர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கும்போது ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்துள்ளது. பெண்களுக்கு மட்டும்தான் கெடுபிடியா என்றால் ஆண்களுக்கும் தான் வெஸ்டர்ன் உடை, வெஸ்டர்ன் முடிவெட்டு என எதுவும் கூடாது. கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. சினிமா, பாட்டு, மதுவிற்கு தடை என பட்டியல் நீளும். பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில் மாதம் ஒரு குண்டு வெடிப்புக்கு மட்டும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.