விழுப்புரம் மாவட்டம், கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் இருவர் திருக்குறளில் இரண்டு உலக சாதனைகளைப் படைத்துள்ளனர்.
எதைக் கேட்டாலும் சொல்லும் திறமை
சாதனாவும் சத்யாவும் திருக்குறளில் அதிகாரம், முதல் சீர், இறுதி சீர் இப்படி எதைக் கேட்டாலும் சொல்லும் திறமை பெற்றவர்கள். 1 முதல் 1330 வரை எந்தக் குறளையும் தெளிவாக ஒப்பிக்கும் திறமை பெற்றவர்கள். உதாரணத்துக்கு 555ஆவது குறள் என்ன என்று கேட்டால், முழுக்குறளையும் விரைவாகவும் தெளிவாகவும் சொல்கின்றனர்.
திருக்குறள் போட்டியில் மாணவர்கள் வெல்வது வழக்கமான ஒன்றுதானே என்று நினைக்கலாம். இவர்கள் இருவரும் ஒலக்கூர் ஒன்றியத்தைச் சேர்ந்த, கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள். கூலி வேலைக்குச் செல்லும் ஏழைப் பெற்றோரின் குழந்தைகள்.
இந்நிலையில் 8ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவி ச.சாதனா (14) 1,330 திருக்குறளையும் மிக விரைவாக 13.29 நிமிடத்தில் ஒப்பித்து, புதிய உலக சாதனை படைத்தார்.
அதே வகுப்பில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவி தி.சத்யா (14) 1330 திருக்குறள்களின் எண், அதிகாரம் ஆகியவற்றில் எதைக் கேட்டாலும், 0.41 நொடிகளிலேயே அந்த திருக்குறளை நினைவுபடுத்திக் கூறி, புதிய உலக சாதனை படைத்தார். இவர்கள் இருவருக்குமான உலக சாதனை சான்றிதழை Unique World Records என்ற அமைப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கியது.
திருக்குறள் முற்றோதல் நிகழ்வு
கொரோனா அரசுப் பள்ளி மாணவிகளின் சுமார் 2 ஆண்டுகாலப் படிப்பைக் காவு வாங்கிய நிலையில், 1330 குறள்களையும் படித்து முடித்து, கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் இருவரும் பரிசு பெற்றனர்.
வியந்த கிராம மக்கள்
மாணவிகளுக்குத் தொடர் பயிற்சி அளித்த கோனேரிக்குப்பம் பள்ளியின் ஆசிரியர் ஆரோக்கியராஜ் ஏபிபி நாடுவிடம் கூறும்போது, ''2 மாணவிகளும் மிகக் கடுமையாக முயற்சி செய்து உலக சாதனை படைத்துள்ளனர். மேடையில் அமர்ந்த விருந்தினர்கள், கிராம மக்கள் அனைவரும் வியந்து பார்த்தோம். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மாணவிகள் போராடி வென்றனர்.
விரைவாக ஒப்புவிக்கும் உலக சாதனையை அடுத்து, சாதனா 1330 குறள்களையும் தெளிவாக, பொறுமையாக 33 நிமிடங்களில் ஒப்புவித்தார். உலக சாதனைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. திருக்குறளில் உலக சாதனை படைத்த மாணவிகள் இரண்டு பேருமே, எங்களின் அரசுப் பள்ளிக்கும், தமிழ் மொழிக்கும், தமிழர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்