கள்ளக்குறிச்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாமியார், மருமகளுக்கு  தனியார் உணவகம் விருந்தளித்தது.காலை முதலே மாமியார் மருமகள் மாறி மாறி ஊட்டி கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டனர். 

 

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஸ்ரீனிவாசா ஹோட்டலில் மகளிர் தினத்தை முன்னிட்டு 8.3.2024 முதல் 12.03.24 வரை மாமியார் மருமகள் ஒன்றாக இணைந்து சாப்பிட்டால் விலை இல்லா உணவு வழங்கப்படும் என ஓட்டல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதலே கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாமியார், மருமகள் அன்பை பரிமாறிக் கொள்ளும் வகையில் உணவை பரிமாறிக் கொண்டு மகிழ்ந்தனர்.

 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடையாளம் கண்டு சம உரிமைக்கான அவர்களது போராட்டத்தை ஊக்குவிக்க கூடிய ஒரு நாளாக இது அமைகிறது.