விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு திருக்கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு கொண்டு வருகிறார். இதில் முதலாவதாக மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள பூமீஸ்வரன் கோவிலில் ஆய்வு மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார், ஆய்வின் இறுதியில்


செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-


தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திருக்கோயில்கள் புனரமைக்கும் பணிகளை வேகப்படுத்தியும் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு கால விதிப்படி நடக்க வேண்டிய குடமுழுக்கு பணிகளை விரைவுபடுத்தியும், ஏற்கனவே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆண்டு கணக்கிலே அந்தப் பணிகள் நிறைவு பெறாமல் பல ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை விரிவுபடுத்தி ஒரு முடிவுக்கு கொண்டு வந்து குடமுழக்கு தேதிகளை அறிவிப்பது போன்ற திட்டங்கள் வைத்து இந்த ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகின்றன.




அந்த வகையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆடவள்ளீஸ்வரர் திருக்கோயில், மயிலம் சிவஞான பாலாய சுவாமி திருமடத்திற்கு சொந்தமான முருகன்  திருக்கோயில், சந்திர மவுலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயில், அதோடு அறங்கநாதர் கோயிலின் மலைப்பாதைகளை ஆய்வு செய்ய இருப்பதாகவும் அதை தொடர்ந்து மேல்மலையனூர் கோவிலும் ஆய்வு செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். இந்த திருக்கோவில்கள் அனைத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் மக்கள் பிரதிநிதிகளோடு இந்த பகுதிகளிலே வரக்கூடிய பக்தர்களுக்கு தேவைப்படுகின்ற அடிப்படை வசதிகளை கேட்டு அறிந்து நிறைவு செய்ய உள்ளோம்.


மரக்காணம் பூமிஸ்வரன் திருக்கோவிலில் சுமார் 80 லட்சம் செலவிலே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகின்ற பணிகள் துவக்கப்பட்டு இருக்கிறது. அதோடு புதிதாக ரூபாய் 85 லட்சம் செலவில் திருத்தேர் அமைக்கின்ற பணியும் அதேபோல் திருக்குளம் ரூ.8 லட்சம் செலவில் புனரமைக்கின்ற பணிகளும், கடைசியாக இந்த திருக்கோயில் குடமுழுக்கு என்பது 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்று இருக்கிறது. இதை விரைவுபடுத்தி ஆறு மாத காலத்திற்குள்ளாக திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு குடமுழுக்கு செய்யப்படும் என்றார்.


அதேபோல் இந்த திருக்கோயிலுக்கு வெளிப்புறத்தில் சுற்றுப்புறத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. ஏற்கனவே இங்கு ராஜகோபுரம் இருந்ததாகவும் அந்த இடத்தில் மீண்டும் ஒரு ராஜகோபுரம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பக்தர்களும் துறை சார்ந்த இணை ஆணையர் சிவக்குமார் அவர்களும் வைத்திருக்கிறார்கள். சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வாய்ப்பிருப்பின் நிச்சயமாக ராஜகோபுரம் கட்டப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் எனவும்,




பக்தர்கள் இறையன்பர்கள் இறை தரிசனத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு உண்டான ஒரு முயற்சியாகவும் இந்த ஆய்வு அமையும் என்பதையும், கோவில்களில் ஆய்வு மேற்கொள்ளும்போது கோயிலுக்கான வருமானம், இடம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் ஆக்கிரமிப்பு உள்ள இடங்களை மீட்பது உள்ளிட்ட அனைத்து விதமான ஆய்வுகளையும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகிறோம். ஆய்வு மட்டும் மேற்கொள்ளாமல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தொடர் ஆய்வினை மேற்கொண்டு வருவதால் தான் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு 1500 கோயில்களில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் மேலான கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு செய்ய தமிழக அரசு இதுவரை இல்லாத அளவுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கி அதன் மூலம் 80 கோயில்களில் இந்த ஆண்டு  குடமுழுக்கு செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர் மேம்பாட்டு பணிகளுக்கு மத்தியில் கோயில்களுக்கு வரவேண்டிய வருவாயை முறைப்படுத்தி, நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து துறையின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தான் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை 200 கோடி ரூபாய் அளவுக்கான வாடகை வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோயில் நிலங்கள் வணிக ரீதியாக பண்பாட்டு உள்ள இடங்களை கண்டறியப்பட்டு வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.




கோயில் ஆக்கிரமிப்புகளை மீட்க முயலும் போது அவர்கள் நீதிமன்றம் சென்று விடுவதால் தாமதம் ஏற்படுகிறது. கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில் இதை முறைப்படுத்தவில்லை. இந்து சமய அறநிலத்துறை சார்ந்த வழக்குகள் வராத நாளே இல்லை என்ற அளவிற்கு தொடர்ந்து வழக்குகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 72 ஆயிரம் கோயில்கள் உள்ளது அந்த கோயில்களில் தனித்தனியாக பொது மக்கள் குழுக்கள் அமைத்து பராமரிப்பு செய்து வருகின்றனர் பொதுமக்களின் திருப்பணிகளை அரசு அதிகாரிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர். அரசியல் ரீதியாக இது போன்ற குழுக்கள் செயல்படும் போதுதான் இந்து சமய நலத்தை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. திருப்பணிக்கு ஒப்புதல் அளிக்கும் குழுவில் ஸ்தபதிகள், தொல்லியல் துறை வல்லுனர்கள், ஆசாரிகள் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். மண்டல வாரியாக இந்த குழுக்கள் அமைக்கப்பட்டது என தெரிவித்தார்.


இந்த ஆய்வின் போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ் மஸ்தான் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடன் இருந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண