விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள கல்பட்டு கிராமத்தில் பாரம்பரியமாக நடத்தப்படும் மீன்பிடி திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பத்திற்கும் மேற்பட்ட சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு மீன்களைப் பிடித்துச் சென்றனர்.
ஆடிப் பெருக்கு பாரம்பரிய திருவிழா:
விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியில், ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு விழா முடிவடைந்த பிறகு பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான மீன்பிடி திருவிழா இன்று காலை உற்சாகமாகத் தொடங்கியது.
போட்டிபோட்டு மீன்பிடித்த பொதுமக்கள்:
இந்த விழாவில் கல்பட்டு, ஒட்டங்காடு, நத்தமேடு, செம்மாறு, ஏனாதிமங்கலம், மாம்பழப்பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்துகொண்டனர். அனைவரும் கைகளில் வலைகள், பரிவாரை, கச்சா போன்ற பாரம்பரிய உபகரணங்களுடன் ஏரியில் இறங்கி போட்டிபோட்டுக்கொண்டு மீன்களைப் பிடித்தனர்.
அதிர்ச்சி அளித்த ‘டேங்க் கிளீனர்’ மீன்கள்:
பொதுவாக இந்த ஏரியில் நடைபெறும் மீன்பிடி திருவிழாவின் போது நாட்டு வகைகளான கெண்டை, ஜிலேபி, விரால் போன்ற சுவையான மீன்கள் பெருமளவில் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஏரியில் அதிகளவில் ‘டேங்க் கிளீனர்’ (Suckerfish/Tank Cleaner) என்றழைக்கப்படும் கழிவுண்ணி மீன்கள் வலையில் சிக்கின. சமையலுக்குப் பயன்படாத இந்த மீன்களைப் பார்த்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்து, அவற்றை அப்படியே ஏரியின் கரைப்பகுதிகளிலேயே போட்டுவிட்டுச் சென்றனர்.
இருப்பினும், சோர்ந்து போகாத கிராம மக்கள், தொடர்ந்து ஆர்வத்துடன் தேடி ஏரியில் கிடைத்த கெண்டை மற்றும் விரால் மீன்களைப் போட்டிபோட்டுப் பிடித்து மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் ‘டேங்க் கிளீனர்’
தமிழ்நாட்டின் முக்கிய ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் ‘டேங்க் கிளீனர்’ (Tank Cleaner / Pleco) மீன்களின் ஆக்கிரமிப்பு இயற்கைச் சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மீன் தொட்டிகளைச் சுத்தம் செய்ய வளர்க்கப்படும் இந்தச் தென் அமெரிக்க நாட்டு மீன்கள், நீர்நிலைகளில் கலக்கும்போது அசுர வேகத்தில் பெருகி உள்நாட்டு நாட்டு மீன் இனங்களை அழித்து வருகின்றன. அண்மையில் கூட புகழ்பெற்ற வேடந்தாங்கல் ஏரியில் பறவைகளின் உணவு ஆதாரத்தைச் சிதைத்த இந்த மீன்களை அகற்றும் பணிகளைத் தமிழக வனத்துறை தீவிரமாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆபத்து
நாட்டு மீன்கள் அழிவு: அயிரை, விரால், குரவை போன்ற பாரம்பரிய சுவையான உள்நாட்டு மீன்களின் முட்டைகளையும் குஞ்சுகளையும் இவை வேட்டையாடி உண்பதால் நாட்டு மீன் உற்பத்தி கடுமையாகக் குறைகிறது
மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பு: இவை உண்ணத் தகுதியற்றவை மற்றும் சந்தை மதிப்பில்லாதவை. மீனவர்களின் வலைகளில் சிக்கும்போது கூர்மையான செதில்களால் வலைகளைக் கிழித்துச் சேதப்படுத்துகின்றன.
