விழுப்புரம் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் தடுக்கும் வகையில் நேற்று இரவு எஸ்.பி.சஷாங்க் சாய் , தலைமையில் திண்டிவனம் டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன், மேற்பார்வையில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில், போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சந்தேக நபர்களை கண்காணிக்க திண்டிவனம், ரோசனை போன்ற இடங்களில் தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பழைய குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பல்வேறு கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் தணிக்கையும் செய்யப்பட்டது. திண்டிவனம், ரோசனை, வெளிமேடுபேட்டை, பிரம்மதேசம், ஆகிய பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.,கள், பெட்ரோல் பங்குகள், நகை கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கி என பல்வேறு இடங்களில் தணிக்கை செய்யப்பட்டது. மேலும், சந்தேக நபர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பட்டணம் அருகே வாகன சோதனையின் போது, அரசு முத்திரையுடன் போலீஸ் ஜீப் ஒன்று வேகமாக வந்தது. அப்போது அந்த வாகனத்தை மறித்து திண்டிவனம் போலீசார் சோதனை செய்தபோது அதில் 25 கட்டை துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் கத்தி ஆகியவை இருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு டிஎஸ்பி அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அது படத்திற்கு பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கி என்பதும் ரஜினி நடிக்கும் "லால் சலாம்" படத்திற்கு செஞ்சியில் சூட்டிங் நடைபெற்று வருவதால், சென்னையில் இருந்து ஷூட்டிங்கிற்காக செஞ்சிக்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. போலீசார் அனைத்து துப்பாக்கிகளையும் சோதனை செய்து, ஆவணங்களையும் சரிபார்த்து அரசு முத்திரையை மறைத்து எடுத்துச் செல்ல வலியுறுத்தினர். உடனடியாக அரசு முத்திரை (G) என்ற எழுத்து மறைக்கப்பட்டு ஜீப் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்