விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே வீட்டில் கொள்ளை அடித்த 7 சவரன் நகையை உருக்கி 56 கிராம் நகை மற்றும் பத்தாயிரத்தை ஏரியில் புதைத்து வைத்திருந்த இரு திருடர்களை கண்டாச்சிபுரம் போலீசார் கைது செய்து நகை பணத்தை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள ஒடுவன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி கடந்த மாதம் 27 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்று உள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட நபர்கள் வீட்டின் கதவின் பூட்டினை உடைத்து பீரோவில் 7 சவரன் தங்க நகையை திருடி சென்றுள்ளனர். வீட்டின் கதவு திறக்கபட்டு கிடந்ததை கண்ட அருகில் வசிப்பவர்கள் துரைசாமிக்கு தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் பேரில் துரைசாமி கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்தில் விசாரணை செய்து தடயங்களை சேகரித்தனர். இந்த விசாரணையில், அங்கு கிடைக்கப்பெற்ற கைரேகைகள் ஏற்கனவே இதே போன்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அருணாச்சலம் என்பவரது கைரேகையுடன் ஒத்து போனது.
இதனையடுத்து சென்னையில் தலைமறைவாக இருந்த அருணாச்சலத்தை போலீசார் பிடித்து விசாரனை செய்ததில் கூடை பின்னும் தொழில் செய்யும் விஜயகுமார் என்ற நபருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டு ஒடுவன் குப்பம் கிராமத்தின் அருகே உள்ள ஏரி பகுதியில் திருடப்பட்ட 7 சவரன் நகையை உருக்கி புதைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் அருணாச்சலத்தை அழைத்துச் சென்று ஏரி பகுதியில் மறைத்து வைத்திருந்த 56 கிராம் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையிலடைத்தனர்.