விழுப்புரம்: குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படம் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


குழந்தை கடத்தல் தொடர்பான வீடியோக்கள் மற்றம்  புகைப்படங்கள் தொடர்பான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், “தமிழ்நாட்டில் சமீப காலமாக குழந்தைகள் கடத்தப்படுவதாக பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் வட மாநில இளைஞர்களை குழந்தைகளை கடத்த வந்ததாக கூறி தவறாக நினைத்து பொதுமக்கள் தாக்குதல் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் அய்யங்கோயில்பட்டு கிராமத்தில் நான்காம் தேதி வடமாநில இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வட மாநில இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்களை சமூக வலைதளத்தில் தவறாக பகிர்ந்த நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை குழந்தை கடத்தல் சம்பந்தமாக விழுப்புரம் மாவட்டத்தில் எந்த புகாரும் வரவில்லை. சமூக வலைதளங்களில் பகிரப்படும் குழந்தை கடத்தல் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை. பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. மேலும் சந்தேக நபர்கள் பற்றி தகவலை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். யாரும் தாக்குதலில் ஈடுபடக்கூடாது. பொதுமக்கள் தொடர்புக்கு 9498100485 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


விழுப்புரம் மாவட்டத்தில் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 20 லட்சம் ரூபாய் நிதி நிதியில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கேமராக்கள் பொருந்தும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு காவலர் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு பணி செய்யப்பட உள்ளது. பொதுமக்களும் தாங்களாக முன்வந்து தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கஞ்சா விற்பனை தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை பொருள் தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை தொடர்பாக தகவல் கிடைத்தால் 94981 00485 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தஞ்சாவூர் பணி தொடர்பாக தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகிறது குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.