விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சிறார்களின் ஆதார் அட்டை புதுப்பிக்க, அரசு இ-சேவை மையங்களில் நாள்தோறும் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்க, பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் ஆதார் அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம் வேண்டும் !

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2022ம் ஆண்டு முதல், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், செஞ்சி, கண்டாச்சிபுரம், மரக்காணம், மேல்மலையனுார், திண்டிவனம், திருக்கோவிலுார், வானுார், விக்கிரவாண்டி, விழுப்புரம் ஆகிய தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அரசு இ-சேவை மையம் இயங்கி வருகின்றது.

இந்த மையங்கள் மூலம் வருவாய்த்துறை சான்றிதழ்கள், நில ஆவணங்கள் பார்வையிடுதல், ஆதார் இணைய சேவைகள் மற்றும் மின் நுகர்வு கட்டணம் செலுத்துதல் போன்ற பல சேவைகளை பெறலாம். பொதுமக்கள் குறை தீர்ப்பு சேவைகளை பெறலாம். தமிழக அரசின் இ-சேவை வலைதளத்திலும், தேவையான தகவல்களைப் பெறலாம். மேலும், மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் மூலமாகவும், இச்சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

கைரேகை மற்றும் கருவிழி பதிவு

இந்நிலையில், 5 வயதுக்குள் ஆதார் பெற்ற குழந்தைகள் 7 வயதை கடந்த பிறகு கைரேகை மற்றும் கருவிழி பதிவை புதுப்பிக்க வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருவிழி, கைரேகை உள்ளிட்ட பயோ மெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கத் தவறினால், ஆதார் செயல் இழந்துவிடும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் தங்களது, 7 வயது முதல், 14 வயது வரையிலான குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க இ-சேவை மையத்திற்கு அதிகளவில் வரத் துவங்கி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் நாள் ஒன்றுக்கு, 25 முதல் 40 ஆதார் அட்டைகளை புதுப்பிக்க 'டோக்கன்' வழங்கப்படுகிறது. ஆனால், ஆதார் மையங்களில் அதற்கும் அதிகமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

கடந்தாண்டு, அரசு மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும், சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, 20 ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிக்காக 20 குழுவினர் நியமிக்கப்பட்டனர். இவர்கள், அந்தந்த வட்டாரங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு ஆதார் புதுப்பித்தல் பணியை மேற்கொண்டனர். இதனால், மாணவ, மாணவிகள் சிரமமின்றி, ஆதார் புதுப்பிக்கும் பணியை செய்ய முடிந்தது.

இந்தாண்டு அரசு பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. எனவே 7 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களின் ஆதார் புதுப்பித்தல் பணிக்காக, சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.  பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி, ஆதாரை புதுப்பிப்பதற்கு அரசு  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.