விழுப்புரம்: வெள்ளத்தில் சிக்கித் தவித்த 3 மாத குழந்தையை இளைஞர் ஒருவர், கழுத்தளவு தண்ணீரில் தலையில் வைத்து மீட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், குழந்தையை சாதூர்யமாக மீட்ட இளைஞரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.


ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி - மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.


அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 56 செ.மீ அளவிற்கு அதிகனமழை கொட்டித் தீர்த்தது. அதேபோல் வானூர், மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் 40 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. விழுப்புரத்தில் வரலாறு காணாத மழைப் பொழிவை அடுத்து, மாவட்டம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. குடியிருப்புப் பகுதிகளை பெருமளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்து வந்தனர்.


புயல் கரையைக் கடந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நள்ளிரவு திறக்கப்பட்ட நிலையில் 1.70 லட்சம் கன அடி அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் பாய்ந்தது. இதனால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றங்கரையை ஒட்டிய சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து குடியிருப்புகளையும், விளைநிலப் பகுதிகளையும், சாலையையும் பாதித்தது.


வெள்ளத்தில் சிக்கித் தவித்த 3 மாத குழந்தை


இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், தேவனூர் கிராமத்தில் உள்ள சின்ன கவுண்டர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் மழை வெள்ளத்தின் காரணமாக முதல் தளம் வரை வெள்ளநீர் சென்று கொண்டு இருந்தது. இதனால் அந்த பகுதியிலிருந்த மக்கள் அனைவரும் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர்.


இந்த நிலையில் நேற்று மாலை வெள்ளநீர் சற்று வடிந்ததை நிலையில், அங்கிருந்த மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழு மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் பகுத்தறிவு, ரம்யா தம்பதியினரின் 3 மாத கைக்குழந்தையுடன் மொட்டை மாடியில் இருந்தனர். இதனை பார்த்த ஆறுமுகம் என்ற இளைஞர் சாதுரியமாக செயல்பட்டு கயிறு கட்டி குழந்தையை பாத்திரத்தில் வைத்து மீட்டுள்ளார்.


கழுத்தளவு தண்ணீரில் தலையில் பாத்திரத்தில் மூன்று மாத குழந்தையை மீட்ட இளைஞர்


கழுத்தளவு தண்ணீரில் தலையில் பாத்திரத்தில் மூன்று மாத குழந்தையை வைத்து மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், திருவெண்ணெய்நல்லூர் தொட்டிக்குடிசை, அரசூர் அருகே வராகி அம்மன் கோயில் மற்றும் ஆற்றுமணல் திட்டு பகுதியில் சிக்கித் தவித்தவர்கள்  வெள்ளம் வடிந்த பின் வீடு திரும்பினர்.


விழுப்புரம் மாவட்டத்தில் திருப்பாச்சனூர், மேட்டுப்பாளையம், பில்லூர், காணை, மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தரைப்பாலங்களில் வெள்ளநீர் மூழ்கியதால் 150-கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.