விழுப்புரம் மாவட்டம்  மரக்காணம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திண்டிவனம் தொகுதி அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் கலந்து கொண்டு பேசுகையில், “மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இதுவரை இல்லாத நிலையில் தற்பொழுது கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. அதுவும் பள்ளி வளாகத்தின் எதிரில் நின்று கொண்டு கஞ்சா வியாபாரிகள் கூவி கூவி விற்பனை செய்கின்றனர். இந்த கஞ்சாவுக்கு இளைஞர்கள் மட்டும் அல்லாமல் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர் இதுபோல் பல கிராமங்களில் புதுவையில் இருந்து கடத்தி வரப்படும் மது பாட்டில்கள் கள்ளச்சாராயம் ஆகியவற்றின் விற்பனையும் அமோகமாக நடைபெறுகின்றது.


இதுபோல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை, மரக்காணம் காவல் ஆய்வாளராக பணியாற்றிய சுரேஷ் பாபு என்பவரிடம் மரக்காணத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் அளித்தால், காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு தகவல் கொடுத்தவரின் முழு விவரத்தையும் மது, கஞ்சா வியாபாரிகளிடம் கூறி விடுகின்றனர். இதனால் போதை பொருள் விற்பனை குறித்து தகவல் கொடுக்கவே அஞ்சும் நிலை உள்ளது என்று ஆர்ப்பாட்ட கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் நகர செயலாளர் கனகராஜ், மாநில மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் கந்தன் உள்பட பலன் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.