விழுப்புரம் : விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனைக்கு பட்டாமாறுதல் செய்ய ஐந்தாயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை கிராமத்தில் ராஜீ என்பவர் காலி வீட்டு மனையை இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாங்கியுள்ளார். அந்த வீட்டு மனைக்கு பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பித்திருந்த நிலையில் மனையை அளந்து பட்டா மாறுதல் செய்ய 5 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டுமென சர்வேயர் வெங்கடாச்சலம் கூறியுள்ளார். லஞ்சம் கொடுத்து பட்டா மாறுதல் செய்ய விரும்பாத ராஜீ இது தொடர்பாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் நேற்றைய தினம் புகாரளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையிலான அதிகாரிகள் ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து கொடுக்க கூறியுள்ளனர். அதன் பேரில் இன்று ரசாயனம் கலந்த ஐந்தாயிரம் ரூபாயை ராஜீ சர்வேயரிடம் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பட்டா மாறுதல் செய்ய 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் தங்கள் புகார்களை சென்னை தலைமை அலுவலக தொடர்பு எண்கள் 044-22321085, 22310989, 22331090 என்ற எண்களிலும், விழுப்புரம் மாவட்ட அலுவலக தொடர்பு எண் 04146-259216 என்ற எண்களின் புகார்களை தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.