விழுப்புரம்: மரக்காணம் அருகேயுள்ள கந்தாடு கிராமத்தில் மரக்காணம் போலீசாரை கண்டித்து பெண் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டத்தால் திண்டிவனம் மரக்காணம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள கானிமேடு கிராமத்தை சார்ந்த சக்கரவர்த்தி மற்றும் வனிதா தம்பதியரின் 16 வயது மகள் கடந்த வியாழக்கிழமை அன்று காதலனுடன் சென்றுள்ளார். இதனால் மன வருத்தத்தில் இருந்த வனிதா மரக்காணம் காவல் நிலையத்தில் மகளை மீட்டு தர கோரி புகார் அளித்துள்ளார். அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.


மகள் வீட்டை விட்டு வெளியேறிய மன உளைச்சலில் இருந்த வனிதா வீட்டில் நேற்றை தினம் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். வீட்டில் தாய் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து வனிதாவின் மகன் சந்தோஷ் கதறி அழுது மரக்காணம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பெயரில் மரக்காணம் போலீசார் வனிதாவின் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்து பின்னர் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.


இந்த நிலையில் 16 வயது பெண் காதலுடன் சென்ற புகாரின் மீது மரக்காணம் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் வனிதா உயிரிழந்ததாக கூறி, வனிதாவின் உடலை கந்தாடு கிராமத்தில் உள்ள மரக்காணம் திண்டிவனம் செல்லக்கூடிய பிரதான சாலையில் சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


மறியல் காரணமாக திண்டிவனம் மரக்காணம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் வனிதாவின் உறவினர்களுடன் நீண்ட நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சாலையிலிருந்து உடலை அப்புறப்படுத்தினர்.