விழுப்புரம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2023 ஆம் நிதியாண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 94 வழக்குகளில் பாதிக்கப்பட்ட 178 நபர்களுக்கு தீருதவித் தொகையாக ரூ.1,65,69,050 வழங்கப்பட்டுள்ளது
வன்கொடுமை தடுப்புச் சட்டம் கண்காணிப்பு குழுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் - 1989 மற்றும் திருத்த விதிகள் 2016 நான்காம் காலாண்டு மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, தலைமையில் நடைபெற்றது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2023 ஆம் நிதியாண்டில் 94 வழக்குகள் பதிவு
மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2023 ஆம் நிதியாண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 94 வழக்குகளில் பாதிக்கப்பட்ட 178 நபர்களுக்கு தீருதவித் தொகையாக ரூ.1,65,69,050/- (ஒரு கோடியே அறுபத்து ஐந்து இலட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து ஐம்பது மட்டும்) எவ்வித நிலுவையுமின்றி உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த 23 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக தலா 5,000 ரூபாய் மற்றும் பஞ்சப்படி சேர்த்து மொத்தம் ரூ.13,22,418/- வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 28.12.2023 அன்றைய நிலையில் மொத்தம் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,78,91,468/- வழங்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் மாதாந்திர ஓய்வூதியம்
கூடுதல் நிவாரணங்களாக, வழக்குகளில் பாதிக்கப்பட்டு இறந்த குடும்பங்களில் 8 நபர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. 4 வழக்குகளில் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசுப்பணி வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு எவ்வித நிலுவையுமின்றி உடனுக்குடன் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டுவருகிறது. மேலும், மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவின் சார்பில் ஒன்றினைவோம் சமூக விழிப்புணர்வு தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், உதவி இயக்குநர், குற்ற வழக்கு தொடர்வுத்துறை பா.கலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள்.எஸ்.ஆறுமுகம், முனைவர் எம்.எஸ்குமரவேல், வி.அகத்தியன், வி.எம்.மணி,வி.தனஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.