யார் இந்த நீதிபதி செம்மல்? - அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய விழுப்புரம் எம்பி ரவிக்குமார் !
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் உண்மைக்கு மாறானவை என மாவட்ட அளவில் இருக்க கூடிய விழிப்பு கண்காணிப்பு கூட்டத்தில் வைத்து ரத்து செய்யப்படும் சூழல் உள்ளது.

விழுப்புரம்: : காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மலின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். விழுப்புரத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் மீது எடுக்கப்பட்ட பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.,
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு நான்கு பயன்படுத்தி, தனது பணியை சரியாக செய்ய தவறிய காவல் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுத்த நீதிபதி செம்மல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய இடைநீக்க உத்தரவை ரத்து செய்வதற்கு தமிழக முதலமைச்சர் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் உண்மைக்கு மாறானவை என மாவட்ட அளவில் இருக்க கூடிய விழிப்பு கண்காணிப்பு கூட்டத்தில் வைத்து ரத்து செய்யப்படும் சூழல் உள்ளது. இந்தியாவில் நான்கு மாநிலங்களில் தான் இப்படியான சூழல் உள்ளது. அப்படி செய்யக்கூடாது. இந்திய அளவில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இதனை வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் இதனை வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு இருந்தும் இந்த நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மாண்புமிகு முதல்வர் உத்தரவிட வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நீதிபதி செம்மல் பிரிவு நான்கை பயன்படுத்தும் நிலை வந்திருக்காது. அது சரியாக செயல்படுத்தப்படாத காரணத்தினால் தான் அந்த பிரிவை அவர் பயன்படுத்தியுள்ளார். சட்டத்தை செயல்படுத்த முயற்சித்த ஒருவருக்கு இவ்வாறு தண்டனை வழங்குவது இயற்கை நீதிக்கு முரணானது. எனவே அவருடைய இடைநீக்கத்தை ரத்து செய்ய உடனடிக்கை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியினர் தொடர்பான பல வழக்குகள் உண்மைக்கு மாறானது என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அப்படி தொடராமல் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.























