விழுப்புரம் மாவட்டத்தில் கோமாரி நோய் / கால் மற்றும் வாய் நோய்-5வது சுற்று தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. "கோமாரி நோய்" பிளவுபட்ட கால் குளம்புகள் உடைய பிராணிகளை தீவிரமாகத் தாக்கக் கூடிய ஓர் வைரஸ் / நச்சுயிரி நோயாகும். இதற்கு "கால் மற்றும் வாய் நோய்" மற்றும் “காணை நோய்” என்றும் அழைக்கப்படும். மாடு, ஆடு, பன்றி, மான், யானை போன்ற விலங்குகளைப் பாதிக்கும். இந்நோய் கால்நடைகளில் கடுமையான காய்ச்சலை (104°C) உண்டாக்கும். மிக எளிதில் தொற்றக்கூடிய நோயாகும். பாதிப்புக்கு உள்ளான கால்நடைகளில் வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நூல் போல் தொங்கிக் கொண்டு ஒழுகும். அசை போடும் போது "சப்பு கொட்டுவது" போல் சப்தம் உண்டாகும்.
வாயின் உட்பகுதி, ஈறுகள், நாக்கு, மடி, கால் குளம்புகளின் நடுப்பகுதி ஆகியவற்றில் கொப்புளங்கள் (Vesicles) தோன்றி உடைந்து புண்ணாகும். இதனால் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலினால், எச்சில் தொடர்ந்து உற்பத்தியாகி ஒழுகி, குளம் போல் காட்சியளிக்கும். தீவனம் உட்கொள்ளாது. சினை மாடுகளில் “கருச்சிதைவு" (Abortion) ஏற்படும். கன்றுகள் பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலை அருந்துவதால் கன்றுகளில் கண்டிப்பாக நோய் தாக்கி இறக்க நேரிடும்.
இந்த வகை வைரஸ் அல்லது நச்சுயிரிகள் மூளையை பாதிப்பதால், உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்கக் கூடிய ஓர் பகுதி தாக்கப்பட்டு, பாதிப்பிற்கு உள்ளான கால்நடைகளில் குறிப்பாக பசு மற்றும் எருமை இனங்களில் உடலின் வெப்ப நிலை உயர்ந்தே காணப்படும். இத்தகைய பாதிப்பினால் பசுக்கள் மற்றும் எருமைகள் எப்பொழுதும் அதிகமாக மூச்சு இரைத்தல் இருக்கும். பாதிப்புக்கு உள்ளான கால்நடைகளில் சினை பிடிக்காமல் பல மாதங்கள் வரை பிரச்சனைகளை ஏற்படுத்தும், சரிவரத் தீனியினை உட்கொள்ளாது.
கன்றுகளிலும் நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்து விடுவதால், பால் உற்பத்தி கனிசமான அளவில் பாதிக்கப்பட்டு “பொருளாதார நட்டத்தை" ஏற்படுத்தக் கூடிய கொடிய (Substantial Economic Loss) இந்த வைரஸ் /நச்சுயிரி 300 கி.மீ வேகத்தில் காற்றின் வழியே இதர கால்நடைகளைத் தாக்கும் வல்லமை கொண்டது. பனிக்காலங்களில் கால்நடைகளில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய நோயாகும்.
விழுப்புரம் கோட்டத்தில் 2,35,000 கால்நடைகள் மற்றும் திண்டிவனம் கோட்டத்தில் 2,43,500 கால்நடைகள் மொத்தம் 4,78,500 கால்நடைகளில் 10.06.2024 முதல் 10.07.2024 வரை 30 நாட்களில் கால்நடை பராமரிப்புத்துறையிலுள்ள 97 தடுப்பூசிப் போடும் குழுக்களின் மூலம் தேசிய விலங்கின நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் வாயிலாக 100% இலக்கு அடைந்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 13 மேற்கொள்ளப்படும். ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்தடுப்பூசிப்பணி கால்நடைகளை வளர்க்கும் விவசாயப் பெருமக்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்தடுப்பூசித் திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கி கட்டாயமாக தங்களது கால்நடைகளுக்கு இத்தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும்.
இத்தடுப்பூசியினை சினையுற்ற கால்நடைகள், பால் கறக்கும் பசு மற்றும் எருமை இனங்களில் போட்டுக் கொள்வது அவசியம் என்றும் இதனால் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது என்றும் 100% இலக்கினை அடைந்திட கால்நடைகளை வளர்க்கும் விவசாயப் பெருமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி அளித்து பயனடையவும். பொருளாதார இழப்பிலிருந்து தங்களை காத்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.