கனமழை எச்சரிக்கை! ஆட்சியர் அதிரடி ஆய்வு - விழுப்புரத்தில் தயார் நிலையில் மீட்புப் பணிகள், பொருட்கள்!
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையினை எதிர்கொள்ளும் விதமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதிகளுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம்.

விழுப்புரம்: வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பல்வேறு இடங்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் வடகிழக்கு பருவமழையொட்டி பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழையொட்டி முன்னேற்பாடு பணிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையினை எதிர்கொள்ளும் விதமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் விதமாக அனைத்து பகுதிகளுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றையதினம் விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் மழைகாலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வதற்காக சிறப்பு தளவாடங்களான இரப்பர் போட், ஜெனரெட்டர், சூப்பர் ஜெட் பம்ப், ஏணி வகைகள், ஹைட்டாலிக் டோர் ஒப்பனர், கயிறு வகைகள், பாம்பு பிடிக்கும் கருவி, ஸ்டெச்சர், புயல்கால விளக்குகள், பாதுகாப்பு உடைகள் போன்ற உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள் இருப்பு உள்ளதை நேரில் ஆய்வு
இதனை தொடர்ந்து, விழுப்புரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மழைகாலங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அரிசி, பருப்பு, சக்கரை மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு உள்ளதை நேரில் பார்வையிட்டதோடு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,254 நியாய விலை கடைகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் சரியாக அனுப்பப்படுகிறதா என்பதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
12,546 மின் கம்பங்கள் தயார்
மேலும், கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட பூத்தமேடு ஊராட்சியில் அமைந்துள்ள துணை மின் நிலையம் வளாகத்தில் மின் கம்பம் தயாரிக்கப்பட்டு வருவதையும், பேரிடர் காலங்களில் பயன்படுத்துவதற்காக 12,546 மின் கம்பங்கள் தயார் நிலையில் இருப்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டதோடு, கூடுதலாக மின் கம்பங்கள் தயாரிக்கப்பட்டு வைக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பேரிடர் காலத்தில் அவசரகால தொலை தொடர்பு அழைப்பு சம்மந்தமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காணை ஊராட்சியில் பெஞ்சல் புயலால் சேதமடைந்த வையலாமூர் சாலையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மறு சீரமைப்பு செய்து தார் சாலை அமைப்பதற்கும், காணை குப்பம் ஊராட்சியில் நீர்வளத்துறை சார்பில் பம்மை ஆற்றிலிருந்து வைலாமூர் ஏரிக்கு செல்லும் பிரிவில் தலைமதகு கதவு அமைத்திடவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
ரூ.256.73 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை
மேலும், முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆயந்தூர் ஊராட்சியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட ஆயந்தூரிலிருந்து புரவடை செல்லும் சாலையில் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.256.73 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை மற்றும் சாலை நடுவே சிறு பாலம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
எனவே, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் அனைவரும் கனமழை பாதிப்பு ஏற்படாத வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.





















