காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கிய கொடுமை! பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-யிடம் கதறல், நடவடிக்கை பாயுமா?
மாற்று சமூகத்தினரை திருமணம் செய்தத்தால் ஊர் பஞ்சாயத்தார் கிராமத்தை விட்டு தள்ளி வைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்க கூடாதென உத்தரவிட்டுள்ளதால் பாதிக்கபட்ட பெண் விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் புகார்

விழுப்புரம்: மரக்காணம் அருகேயுள்ள மண்டவாய் புதுக்குப்பம் கிராமத்தில் மாற்று சமூகத்தினரை திருமணம் செய்தத்தால் ஊர் பஞ்சாயத்தார் கிராமத்தை விட்டு தள்ளி வைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்க கூடாதென உத்தரவிட்டுள்ளதால் பாதிக்கபட்ட பெண் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள மண்டவாய்புதுக்குப்பம் கிராமத்தில் வசிக்கும் அங்கமுத்துவும் நாராயணபுரத்தை சார்ந்த தாமரைக்கண்ணன் ஆகிய இருவரும் பத்து வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். அங்கமுத்து என்ற பெண் மீனவ சமூகத்தை சார்ந்தவர் என்பதால் வன்னியர் சமூகத்தை சார்ந்த நபரை திருமணம் செய்து கொண்டதால் ஊர் பஞ்சாயத்தார் சில வருடங்களாக மண்டவாய்புதுக்குப்பத்தில் வசிக்க எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் பஞ்சாயத்தார் மாறும் போதும் கிராமத்தை விட்டு வெளியேற பஞ்சாயத்தார் கூறிவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் அங்கமுத்து குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கிராமத்தில் உள்ள கடைகளில் குடிநீர், பால் உள்ளிட்ட அத்திவாசிய பொருட்களை விற்பனையாளர்கள் வழங்க கூடாது என பஞ்சாயத்தார் உத்தரவிட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அங்கமுத்து மூன்று தினங்களாக குழந்தைகளுக்கு பால் வாங்கவும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று வாங்கி வந்துள்ளனர்.
மீண்டும் மீண்டும் பஞ்சாயத்தார ஊரை விட்டு வெளியேற கூறுவதால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க இன்று விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் தன் குடும்பத்தாரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதால் பஞ்சாயத்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து மாவட்ட எஸ்பி சரவணன் விசாரனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் மரக்காணம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
இந்தபுகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மரக்காணம் காவல் ஆய்வாளர் பரணி தெரிவித்துள்ளார். மேலும் கிராம பஞ்சாயத்தில் 9 பேர் கொண்ட நாட்டாமையாக உள்ள பாலு, ராஜா, சங்கர், தங்கராஜ், ராஜ்குமார், ஜெகன், சத்தியமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் கோவில் மைக் செட் மூலமாக கிராமத்தை விட்டு தள்ளி வைத்ததாக ஒலிக்க செய்தததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.





















