விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி! வலது கால் சிகிச்சைக்கு பதில் இடது காலில் அறுவை சிகிச்சை: நடந்தது என்ன?
விழுப்புரத்தில் வலது கால் அறுவை சிகிச்சைக்கு சென்றவருக்கு இடது கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வலது காலில் நேற்று மூட்டு அறுவை சிகிச்சையை அதே மருத்துவர் செய்தார்.

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வலது கால் அறுவை சிகிச்சைக்கு சென்றவருக்கு இடது கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வலது காலில் நேற்று மூட்டு அறுவை சிகிச்சையை அதே மருத்துவர் செய்தார். குற்றச்சாட்டிற்கு உள்ளான மருத்துவர் பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார்.
வலது கால் சிகிச்சைக்கு பதில் இடது காலில் அறுவை சிகிச்சை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பெரியதச்சூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வரும் மாரிமுத்து(46) என்பவருக்கு வலது கால் முட்டியில் இரண்டு ஜவ்வுகள் கிழிந்து சேதமடைந்ததால் அறுவைச் சிகிச்சைக்காக விழுப்புரம் நான்கு முனை சந்திப்பிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு கடந்த 4ஆம் தேதி மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவரான சரவணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர்.
அறுவைச் சிகிச்சை முடிந்து வார்டிற்கு மாற்றப்பட்டு மயக்க நிலையில் இருந்த மாரிமுத்துவை அவரது மனைவி பார்க்க சென்ற போது வலது காலில் உள்ள மூட்டிற்கு பதிலாக இடது கால் மூட்டில் அறுவைச் சிகிச்சை செய்து கட்டு போடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மாரிமுத்துவின் மனைவி தங்கம்மாள் வாக்குவாதம் செய்து தவறாக கால் மூட்டு மாற்றி சிகிச்சை செய்யபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர்.
சிகிச்சை தொடர்பாக விழுப்புரம் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் துறை இணை இயக்குநர் ரமேஷ்பாபுவிடம் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சிகிச்சை தொடர்பான விசாரனை செய்ய 4 பேர் கொண்ட மருத்துவ குழு நியமிக்கப்பட்டு விசாரனை செய்யப்பட்டன. இந்நிலையில் மருத்துவர் சரவணன் மற்றும் மருத்துவமனை தலைமை மருத்துவர் லதா ஆகிய இருவரும் வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சைக்காக மூட்டினை திறந்தபோது காலை மாற்றி அறுவை சிகிச்சை செய்ய திறந்துள்ளோம் என தெரியவந்ததை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யாமல் மூடிவிட்டதாகவும் தவறான சிகிச்சை செய்யவில்லை தெரிவித்துள்ளனர். மேலும் வலது காலிலில் நேற்று மருத்துவர் சரவணன் ஆர்த்ரோஸ்கோபி சிகிச்சையை செய்தார். சிகிச்சை நலமாக உள்ளது .
மருத்துவர் சரவணன் ஆண்டு தோறும் 70 மூட்டு அறுவை சிகிச்சை, 40 க்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் சரவணன் பணியிடை மாற்றமும் செய்யபட்டுள்ளார். மூட்டு அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்கவேண்டுமென மாரிமுத்து குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.





















