விழுப்புரம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் முதல்வர் அறிவித்த ரூ.2,000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று வருவாய்த் துறை செயலர் அமுதா தெரிவித்துள்ளார். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.2,000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் மற்ற இடங்களில் இன்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு படிப்படியாக ஓரிரு நாட்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமுதா தெரிவித்துள்ளார்.


அரசு முதன்மைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணையாற்று வெள்ளப்பெருக்கு காரணத்தினால் பெரும்பாலான பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து இப்பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி சென்றார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், ஃபெஞ்சல் புயலினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.2000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். அந்த வகையில், நிவாரண உதவிகள் வழங்கிடும் வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கீடு எடுக்கும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இன்று முதல் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணத்தொகை ரூ.2000 வழங்கப்படவுள்ளது. பின்னர் நியாய விலைக்கடைகள் வாயிலாக உறுதிச்சீட்டு (டோக்கன்) வழங்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும்.


Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!


கடந்த மூன்று நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள், குடிதண்ணீர், பால்பவுடர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலமாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாவட்ட மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய நிவாரணப்பொருட்கள் அனைத்தும் இம்மையத்தின் மூலமாக குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் அனைத்தும் நிவாரண முகாம்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உரிய அலுவலர்கள் மூலமாக வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நியாய விலைக்கடைகள் மூலமாகவும், அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப்பொருட்களும் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.


விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மின் இணைப்பு ஏழு பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் மின்இணைப்பு சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடிநீர் வசதி அனைத்து குடியிருப்புகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களுக்கு நீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இப்பணியும் ஓரிரு நாட்களில் முழுவதுமாக முடிக்கப்பட்டு விடும். தற்பொழுது மழை பொழிவு இல்லாததினால் மீட்புப்பணிகள் பெருமளவில் முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பணிகள் விரைந்து முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 135 பொது சமையல் கூடங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தொடர்ந்து உணவு மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


ஃபெஞ்சல் புயல் நிவாரணம் 


ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிட” தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும்; சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கிடவும்; முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும்; பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500 வழங்கிடவும்;மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 வழங்கிடவும்; எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500 வழங்கிடவும்; வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000 வழங்கிடவும்; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கிடவும்; அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும்; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.