விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள அத்தியூர்திருக்கை கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜாமணி மகன் ரகு (வயது 30), குருநாதன் மகன் காத்தவராயன் (32). இதே போல் மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் கார்த்திகேயன் (38). உறவினர்களான இவர்கள், கட்டிட தொழில் செய்து வந்தனர். 12ந் தேதி இவர்கள் 3 பேரும், திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.எடையார் கிராமத்தில் உள்ள தங்களது உறவினரின் புதிய வீடு கட்டுவதற்கான பூமி பூஜைக்காக சென்றனர். அங்கு பூஜைகள் முடிந்த நிலையில், மாலை 6 மணிக்கு தங்களது வீட்டுக்கு திரும்பினர். அப்போது, திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொங்கராயனூர் - அருளவாடி இடையே செல்லும் தென்பெண்ணை ஆற்றை அவர்கள் கடந்து செல்ல முயன்றனர்.


அப்போது, ஆற்று வெள்ளத்தில் 3 பேரும் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் கார்த்திகேயனை கிராம மக்கள் மீட்டனர். ஆனால், ரகு, காத்தவராயன் ஆகிய இருவரையும் தேடும் பணியில் இன்று 4-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு, மீட்பு பணியை துரிதப்படுத்தினார். அப்போது, திண்டிவனத்தில் இருந்து மேலும் ஒரு படகு மூலம் 10 பேர் கொண்ட குழுவையும் தேடும் பணியில் ஈடுபடுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார். இதற்கிடையே, நேற்று மாலை மரகதபுரம் பகுதியில் காத்தவராயனை பிணமாக, மீட்பு படையினர் மீட்டு வந்தனர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரகுவை மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.