விழுப்புரம்: விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், லாரியின் முன்பகுதி (கேபின்) முழுவதுமாக எரிந்து சாம்பலானது. லாரி ஓட்டுநர் சமயோசிதமாகச் செயல்பட்டதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

Continues below advertisement

விபத்து நடைபெற்றது எவ்வாறு?

விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், லாரியின் முன்பகுதி முழுவதுமாக எரிந்து சாம்பலானது. சென்னையிலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி லோடுடன் கூடிய கண்டெய்னர் லாரி ஒன்று சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சுதர்சனம் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

லாரி, விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரம் மணிமண்டபம் பகுதியைக் கடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக லாரியின் பேட்டரி பகுதியில் திடீரென மின்கசிவு காரணமாகத் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தத் தீ லாரியின் முன்பக்க கேபின் பகுதி முழுவதும் கடகடவெனப் பரவியது.

Continues below advertisement

ஓட்டுநரின் சமயோசித செயல்

லாரியின் முன்பக்கத்தில் இருந்து புகையும் தீயும் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் சுதர்சனம், உடனே லாரியை தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாகப் பாதுகாப்பாக நிறுத்தினார். பின்னர் உடனடியாக கீழே இறங்கித் தப்பித்ததால், அவர் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தீவிர நடவடிக்கை

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும், தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள்ளேயே லாரியின் முன்பக்கம் முழுவதும் தீப்பற்றி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் முற்றிலும் அணைக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் லாரியில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்த இச்சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பையும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.