விழுப்புரத்தில் உயிரோடு இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. லஞ்சம் பெற்றுக்கொண்டு வருவாய்துறை அதிகாரிகள் அளித்த போலி இறப்பு சான்றிதழ் மூலம் மூதாட்டியின் சொத்தை பறித்துக்கொண்ட மகள் மற்றும் பேரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்த இருசப்பன் மகன் சுரேஷ். இவர் தனது பாட்டி குப்பச்சியுடன் (வயது 89) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- என்னுடைய தம்பி மோகன், எனது பாட்டி குப்பச்சி உயிருடன் இருக்கும் போதே 30.12.2008 அன்றைய தேதியில் இறந்து விட்டதாக கூறி ஒரு போலியான இறப்பு சான்றினை தயார் செய்ததோடு எனது தந்தையின் வாரிசு சான்றில் எனது பெயரை நீக்கிவிட்டு தாயார் கோதாவரி, தங்கை சுகன்யா ஆகியோரின் பெயர்களை மட்டும் சேர்த்து வாரிசு சான்று ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் கடந்த 30.7.2021 அன்று 2½ செண்ட் இடத்தை எனது தாய், தங்கையிடம் ஒரு பாகப்பாத்திய விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டார். அந்த பாகம் பிரிக்காத இடத்தை போலி வாரிசு சான்று மூலம் மோசடி செய்துள்ளார். இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளும் உறுதுணையாக இருந்துள்ளனர். எனவே எனது தந்தை வாரிசு சான்றில் எனது பெயரை நீக்கி போலி வாரிசு சான்று அளித்துள்ள இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு அந்த பாகப்பாத்திய விடுதலை ஆவணத்தை ரத்து செய்து வாரிசு முறையில் எனக்குரிய பாகத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை பெற்ற ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக கூறினர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரோடு இருப்பவரை இறந்ததாக போலி ஆவணம் தயாரித்து சொத்து மோசடி செய்துள்ள மூதாட்டியின் மகள் மற்றும் பேரன், பேத்தி ஆகியோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு துணை போன கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், உதவியாளர் அழகுநாதன், வட்டாச்சியர் ஆகியோர் லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்