விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பற்றிய ஆய்வு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தற்பொழுது வரை நடைபெற்ற சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும், விபத்துக்கான காரணங்கள் குறித்தும், அப்பகுதிகளில் விபத்து நடைபெறாமல் தடுப்பதற்காள மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.
எச்சரிக்கை தகவல் பலகைகளை அமைத்திட வேண்டும்
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெற்றுவரும் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்ததுடன், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுமட்டுமல்லாமல், பணிகள் நடைபெறுவது தொடர்பாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், 100 மீட்டர் குள்ளாகவே சாலைப்பணி நடைபெறுவது தொடர்பான எச்சரிக்கை தகவல் பலகைகளை அமைத்திட வேண்டும். சாலைப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் நல்ல முறையில் சர்வீஸ் சாலைகள் இருப்பதை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மேலும், பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றுவதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பேருந்துகளை சர்வீஸ் சாலைகளில் வந்து பயணிகளை இறக்கி ஏற்றிய பின்னரே மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும் என போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்தல் வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து ஏற்படும் பகுதிகளில் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர், காவல் துறை அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோர் கூட்டாக பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து, மீண்டும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சாலைகளிலும் வேகத்தடை (Speed Breaker) தொலைவில் இருந்தே தெரியும் வகையில் தெர்மோபிளாஸ்ட் பெயிண்டால் கோடுகள் வரைந்திருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செல்லக்கூடிய வாகனங்கள் சாலை விதிகளுக்குட்பட்டு முகப்பு விளக்கு மற்றும் ஒலி எழுப்பிகளை பயன்படுத்த வேண்டும். அவ்வபோது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முகப்பு விளக்கு மற்றும் ஒலி எழுப்பிகள் தொடர்பாக வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து சாலைகளிலும், தகவல் பலகை (Sign Boards), வாகன நிறுத்திட பலகை (Parking Boards) தேவையான இடங்களில் அமைக்கப்பட வேண்டும். சந்திப்பு சாலைகளில் (Junction Point) மேம்படுத்திடவும், தேவையான இடங்களில் ஆய்வு செய்து உயர்கோபுர மின் விளக்குகள் (Highmas light) அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திசைகாட்டும் பலகைகளை (Sign Boards) 50 மீட்டருக்கு முன்னரே நிறுவுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விழுப்புரம் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை
தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படா வண்ணம், தொடர் கண்காணிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பொறுத்தவரை அவ்வபோது ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படா வண்ணம் தொடர் கண்காணிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும், தொடர் கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகைள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
போதைப்பொருட்கள் விழிப்புணர்வு
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்படுத்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் Drug Free TN செயலி (Mobile App) குறித்து செயல்முறை விளக்கம் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வது குறித்தும், இச்செயலியின் பாதுகாப்பு மற்றும் பயன்கள் குறித்த விவரம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து ஏற்படுத்திட வேண்டும்.
காவல்துறை, உணவுபாதுகாப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களோடு தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக கூட்டாக ஆய்வு செய்திடவும், விற்பனை செய்வோர் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான்தெரிவித்தார்.