விழுப்புரம்: மரக்காணம்  பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில்,
 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் மானூர் ஊராட்சியில் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படாதவாறு, அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் செண்டர் மீடியன் அமைக்கப்பட்டதையும், வெள்ளை நிற வண்ணம் அடிக்கப்பட்ட வேகத்தடையுடன் ஒளிரும் சமிக்கைகள் அமைக்கப்பட்டதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
தொடர்ந்து மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட தென்னேரி ஊராட்சியில் தாட்கோ மூலம் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மையம் கட்டப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் முருக்கேரி கிராமத்தில் ஆலத்தூர் செல்லும் பிரிவு சாலையில் விபத்து ஏற்படாத வண்ணம் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கான வேகத்தடை அமைப்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. சிறுவாடி ஊராட்சி முருக்கேரி கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் சிறு பாசன ஏரி திட்டத்தின் கீழ் ரூ.4.18 இலட்சம் மதிப்பீட்டில் ஏரி தூர்வாரி கரைகளை பலப்படுத்தி பறவை திட்டு அமைக்கும் பணியினையும் மற்றும் கொளத்தூர் ஊராட்சியில் ஓட்டேரியில் சிறு பாசன ஏரி திட்டத்தின் கீழ் ரூ.4.88 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் எரி கரைகளை பலப்படுத்தி புனரமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
 
மேலும், நீர்வளத்துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் ஏந்தூர் ஏரி, வன்னிப்பேர் ஏரி, பழமுக்கல் ஏரி, நாகல் பாக்கல் ஏரி ஆகிய ஏரிகளின் கலிங்கல் மறுகட்டுமானம் பணிகள் மற்றும் ஏரிக்கரை பலப்படுத்தி புனரமைக்கப்படும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
 
தொடர்ந்து, மரக்காணம் ஒன்றியம் நடுகுப்பம் ஊராட்சி மற்றும் கந்தாடு மேற்கு ஊராட்சியில் புது தெரு ஆகிய பகுதிகளில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
 
அதனை தொடர்ந்து, மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட சால்ட் ஆபிஸ் ரோடு பகுதியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட பணியினை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மரக்காணம் பேரூராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சுற்றுலா மாளிகை பகுதியில் தற்காலிகமாக இயங்கி வரும் மீன் மார்கெட்டினை இடம் மாற்றம் செய்வதற்கு மரக்காணம் மேற்கு கரிப்பாளையம் பகுதியில் மீன் மார்கெட் அமைப்பதற்கான இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
தொடர்ந்து, மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட ரங்கநாதபுரத்திலிருந்து கூனிமேடுகுப்பம் வரை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் 1 கிலோ மீட்டர் அளவுள்ள தார் சாலை போடப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு, சாலை போடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் குறித்தும், சாலையின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.