விழுப்புரம்: சி.மெய்யூர் கிராமத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இரு மேம்பாலங்கள் எப்போது வேண்டுமானாலும் தானாக இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் இருக்கின்றனர்.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் சேதம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சி.மெய்யூர் கிராமம் உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் தென்கரையோரம் அமைந்துள்ள இக்கிராம எல்லையில், தென்பெண்ணை ஆற்றிலிருந்து பிரிந்து, ராகவன் கால்வாய் மற்றும் மலட்டாறு செல்கிறது. ராகவன் கால்வாய் மற்றும் மலட்டாறு இடையே காமராஜர் ஆட்சிக் காலத்தில் தனித்தனியே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த இரண்டு மேம்பாலங்கள், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, மிகவும் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் தானாக இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.
இரண்டு மேம்பாலத்தின் அஸ்திவார தூண்களும் சேதம்
அதாவது, இந்த இரண்டு மேம்பாலத்தின் அஸ்திவார தூண்களும், மேம்பாலத்தின் மேற்கூரைகளும் மிகவும் பழுதடைந்து, சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, அதன் உள்ளே கம்பிகள் எலும்பு கூடாகக் காட்சியளிக்கிறது. தென்பெண்ணை நதியோரம், முப்போகம் விளையக்கூடிய பகுதியாக, பெரும் விவசாயப் பகுதியாக, திகழக்கூடிய இப்பகுதியில், இருக்கக்கூடிய இந்த இரண்டு மேம்பாலத்தின் வழியாக, கரும்பு வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் நாள்தோறும் அதிகளவு சென்று வருகிறது.
நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்
இதுமட்டுமின்றி, இக்கரையில் இருந்து அக்கறையில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவு சென்று வருகின்றனர். மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் இவ்விரு பாலங்களை உடனடியாக இடித்து, தரைமட்டமாக்கி அவ்விடத்தில் புதிதாக மேம்பாலங்கள் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவச் செல்வங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், இதுவரை யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கவனிக்குமா அரசு?
அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கால் ஆற்காடு, வீரமடை, வீரசோழபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக திருக்கோவிலூர், திருவெண்ணெய் நல்லூர், சித்தலிங்கமடம் வந்து செல்லும் அப்பகுதி பொதுமக்களும் தங்களது உயிரை பணயம் வைத்து, ஒவ்வொரு நாளும் இந்த இரண்டு மேம்பாலங்களைக் கடந்து வந்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில், வருமுன் காப்பதை விட, இந்த மேம்பாலங்கள் இடிந்து விழுந்து, பேராபத்து ஏற்படுவதற்கு முன், மக்களை காப்பதற்கு, இரண்டு மேம்பாலங்களை உடனடியாக இடித்து தரைமட்டமாக்கி, புதிதாக மேம்பாலங்கள் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் நியாயமான எதிர்பார்ப்பு மட்டுமல்ல, முக்கியக் கோரிக்கை ஆகும்.