விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் டிவி சண்முகம் ஆதரவாளர்களை நீக்கியதற்கு, நீக்கப்பட்ட நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர், மேலும் இபிஎஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பசுபதி நியமிக்கப்பட்டதில் இருந்து இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. புதிய மாவட்ட செயலாளர் பசுபதி மாவட்டம் முழுவதும் நடத்திய செயல்வீரர்கள் கூட்டங்களுக்கு சி.வி. சண்முகம் தரப்பினருக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன் உச்சமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு செஞ்சி அடுத்த வல்லம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சண்முகம் தரப்பினர் மண்டபத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட செயலாளர் பசுபதியின் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் மாவட்டம் முழுவதும் பேசுபொருளானது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிரடி நடவடிக்கையாக சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இணைச்செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட 11 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.
நீக்க அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், நீக்கப்பட்ட நிர்வாகிகள் திண்டிவனம் விருந்தினர் மாளிகை எதிரே ஒன்றுகூடி, "எங்களை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு நன்றி" என்று கூறி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயப்பிரகாஷ், கட்சி தலைமை மற்றும் புதிய மாவட்ட செயலாளர் பசுபதி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
2001-ம் ஆண்டுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் திமுக-காங்கிரஸ் கோட்டையாக இருந்ததாகவும், புரட்சித்தலைவி அம்மா அண்ணன் சி.வி.சண்முகத்தை களமிறக்கிய பிறகுதான் இது அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாறியது என்றும், அவரது உழைப்பால்தான் தொடர் வெற்றிகள் கிடைத்தன என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பசுபதி 2001-ல் பாமக சார்பில் போட்டியிட்டு தோற்றவர் என்றும், பின்னர் அண்ணன் சி.வி.சண்முகத்தின் காலில் விழுந்து, பணம் கொடுத்துதான் கட்சிக்குள் நுழைந்தார் என்றும், அவர் ஒரு சாராய வியாபாரி என்றும் சாடினார். அவரது சொந்த பூத் எண் 174-ல் 1,765 வாக்குகளில் அதிமுக பெற்றது வெறும் 62 வாக்குகள்தான் என்றும், இப்படிப்பட்டவர் பின்னால் படித்த வழக்கறிஞர்கள் செல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் எடப்பாடியாரை நோக்கி, "நீங்கள் திமுகவுடனும் உதயநிதி ஸ்டாலினுடனும் கள்ளக்கூட்டணி பேசவில்லை என்று உள்மனசாட்சியோடு சத்தியம் செய்ய முடியுமா? ஆர்.கே.என் ஹோட்டலில் 'திமுக ஆதரவு தருகிறது, நான் முதலமைச்சர் ஆகப்போகிறேன்' என்று நீங்கள் கூறினீர்களா இல்லையா?" என நேரடியாக கேள்வி எழுப்பினார்.
கட்சியை வளர்க்க பொதுச்செயலாளராக இருக்கிறீர்களா, அழிக்க இருக்கிறீர்களா என்றும், தினமும் யாரை நீக்கலாம் என்று மட்டுமே யோசிப்பதாகவும், இப்படி போனால் ஒருநாள் உங்கள் பெயரையே யாராவது நீக்கிவிடுவார்கள் என்றும் எச்சரித்தார். கட்சி சட்டவிதிப்படி ஒருவரை நீக்கிவிட்டு மீண்டும் சேர்க்க 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், உங்களை 'டெட்பாடி' என்று திட்டிவிட்டு ஓடிய பசுபதியை, கே.பி.முனுசாமியின் சதி வலையில் வீழ்ந்து உடனே மாவட்ட செயலாளராக்கியதாக குற்றம்சாட்டினார்.
தங்கள் குடும்பம் 45 ஆண்டுகளாக அதிமுகவிற்கு உழைத்த ஒரிஜினல் அதிமுக குடும்பம் என்றும், அம்மாவின் பொற்கரங்களால் தனக்கு திருமணம் நடந்ததாகவும், 'துடிப்புமிக்க இளைஞர்' என்று அம்மா தன்னை பாராட்டியதாகவும், இந்த பாசறை பதவி அம்மா கொடுத்தது என்றும் அவர் உருக்கமாக தெரிவித்தார். இறுதியாக பசுபதிக்கு சவால் விடுத்த அவர், தகுதி இருந்தால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு விழுப்புரம் நகர்மன்றத் தலைவராக அல்லது ஒன்றிய சேர்மனாக வெற்றி பெற்று காட்டுமாறும், அப்போது உங்களை மாவட்ட செயலாளராக ஏற்பதாகவும் கூறினார்.
"இந்த சாராய வியாபாரியால் விழுப்புரத்தில் அதிமுக வரலாறு முடிந்துவிட்டது. நாங்கள் எப்போதும் அம்மாவின் விசுவாசிகள்" என்று ஆவேசமாக கூறி முடித்தார். விழுப்புரம் மாவட்ட அதிமுக பாசறை செயலாளரே கட்சியின் பொதுச்செயலாளரை பொதுவெளியில் கடுமையாக சாடியுள்ள சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
