குஷியில் விவசாயிகள்... ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் உழவர் சந்தை - எங்கு தெரியுமா ?
விக்கிரவாண்டி பேரூராட்சியில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் உழவர் சந்தையின் கட்டுமானப்பணிகள் தீவிரம்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி பேரூராட்சி மற்றும் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் கோவில், விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட கக்கன் நகர், விக்கிரவாண்டி அரசு மருத்துவமனை, விக்கிரவாண்டி கால்நடை மருத்தகம், விக்கிரவாண்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனையபுரம் ஊராட்சி மற்றும் முண்டியம்பாக்கம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், விக்கிரவாண்டி வட்டம், திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் கோவில் இடத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருமண மண்டபம், சமையல் கூடம் மற்றும் உணவு அருந்தும் இடம் அமைப்பது தொடர்பாக நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம்
தொடர்ந்து, விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட கக்கன் நகரில், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் அமையவுள்ள இடத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விக்கிரவாண்டி அரசு மருத்துவமளையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு
மேலும், விக்கிரவாண்டி அரசு மருத்துவமளையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் விதமாக, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வருகைப்பதிவேடு, தொற்றாநோய் பிரிவு, பாத மருத்துவ மையம், உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, தாய், சேய் நல சிகிச்சைப் பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள் தனி வார்டு பகுதி மற்றும் மருந்தகம் உள்ளிட்டவற்றினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகளான சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் ஜெனரேட்டர் வசதி உள்ளிட்டவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்து மற்றும் மாத்திரைகள் இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து, விக்கிரவாண்டி கால்நடை மருத்தகத்தினை நேரில் பார்வையிட்டு, கால்நடை மருந்தகத்தில் மருந்து இருப்பு குறித்த பதிவேட்டினை ஆய்வு மேற்கொண்டு, விக்கிரவாண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கால்நடைகளின் விவரம் மற்றும் கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கால்நடை மருத்துவரிடம் கேட்டறியப்பட்டது.
மேலும், விக்கிரவாண்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்படும் விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, 8000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிர்விப்பு மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இச்சங்கத்தின் வாயிலாக 22 கிராமங்களிலிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, நாளொன்றுக்கு 8000 லிட்டர் பால் குளிர்விப்பு மையத்தில் குளிர்விக்கப்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. மேலும், நாளொன்றுக்கு 1800 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபகுதியில், அம்ரூத் 2.0 மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், அமைக்கப்பட்டுள்ள குளத்தினை தேரில் பார்வையிட்டு, குளத்தின் நீர் கொள்ளளவு விவரம், குளத்திற்கு நீர் ஆதாரம் கிடைக்கப்பெறும் வழிகள் மற்றும் அதிகப்படியான நீர் வெளியேறும் பகுதிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், விக்கிரவாண்டி பேரூராட்சியில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் உழவர் சந்தையின் கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அரசு வழங்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி கட்டுமானப் பணிகள் நடைபெறுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், பனையபுரம் ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடுகள் வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளி விஜயா என்பவரின் வசிப்பிடத்தினை நேரில் பார்வையிட்டு, பயனாளியின் விவரம் தொடர்பாக மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, முண்டியம்பாக்கம் ஊராட்சியில், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானம் திட்டத்தின்கீழ், வீடு மறுகட்டுமானம் செய்திட தேர்வு செய்யப்பட்ட பயனாளி பெரியசாமி என்பவரின் வசிப்பிடம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடுகள் வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட கனகாம்பரம், க/பெ. பக்கிரி என்பவரின் வசிப்பிடத்தினை நேரில் பார்வையிட்டு பயனாளிகள் விவரம் தொடர்பாக மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.





















