விழுப்புரம் நகராட்சி 1-10-1919-ம் ஆண்டில் உருவானது. பின்னர் 1.10.1953-ல் 2-ம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து முதல்நிலை நகராட்சியாக 1.4.1973 முதல் தரம் உயர்த்தப்பட்டது. மீண்டும் தேர்வு நிலை நகராட்சியாக 2.3.1988-ல் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.


இந்நகராட்சி 33.13 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இந்நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. 1922-ம் ஆண்டில் முதல் தேர்தலை விழுப்புரம் நகராட்சி சந்தித்தது. இதுவரை 19 தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது 20-வது தேர்தலை விழுப்புரம் நகராட்சி சந்திக்க உள்ளது.


இந்த நகராட்சியில் வார்டு எண் 25, 34, 42 ஆகிய 3 வார்டுகள் ஆதிதிராவிடர் பொதுப்பிரிவுக்கும், 13, 19, 32 ஆகிய 3 வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும், 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 15, 16, 17, 18, 20, 21, 26, 30, 33, 40 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கும், 1, 2, 5, 12, 14, 22, 23, 24, 27, 28, 29, 31, 35, 36, 37, 38, 39, 41 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




இந்த நகராட்சி நிர்வாகத்தை இதுவரை தி.மு.க., அதிமுக. என மாறி, மாறி கைப்பற்றி பொறுப்பு வகித்துள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் நகராட்சி தலைவர் பதவியை ஆண்கள் மட்டுமே அலங்கரித்து வந்த நிலையில் 100 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக தற்போது நடைபெற உள்ள தேர்தலில் நகரமன்ற தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


இதனால் விழுப்புரம் நகரமன்ற தலைவர் பதவியை கைப்பற்ற போகும் பெண் யார்? என்று தி.மு.க, அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி நகர மக்கள் மத்தியிலும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெறும் கவுன்சிலர்கள், பெண் தலைவரை தேர்வு செய்து அவர் நகரமன்ற தலைவராக இருந்து நகராட்சியை கைப்பற்ற உள்ளார்.


இதனால் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தங்கள் கட்சி சார்பில் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த மற்றும் மக்களின் மிகுந்த நம்பிக்கையை பெற்ற வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தேர்தலில் நிறுத்த தயாராகி வருகின்றனர். இதன் காரணமாக விழுப்புரம் நகராட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண