Tindivanam Bus Stand: திண்டிவனம் - சென்னை சாலை அருகே 6 ஏக்கர் பரப்பளவில், நகராட்சி சார்பில் 25 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நிறைவு பெற உள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை தான் வட மாவட்டங்களையும் தென் மாவட்டங்களையும் இணைக்கும் உயிர்நாடியாக இருப்பது திண்டிவனம் நகரம்.
திண்டிவனம் பேருந்து நிலையம் - Tindivanam Bus Stand
திண்டிவனத்தில் 1971-ம் ஆண்டில் இந்திரா காந்தி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் திண்டிவனத்தின் வளர்ச்சி மற்றும் போக்குவரத்து பெருக்கத்தின் காரணமாக இந்த பேருந்து நிலையம் பயன்பாடின்றி போனது. அதை தற்போது இடித்து, வணிக வளாகம் கட்ட நகராட்சி முடிவெடுத்து வருகிறது. பேருந்து நிலையம் என்ற ஒன்று இல்லாமலேயே, மேம்பாலத்தின் அடியில் நின்றபடி பேருந்துகளில் ஏறி வரும் துர்பாக்கிய நிலையை திண்டிவனம் நகரவாசிகள் நீண்ட காலமாக அனுபவித்து வருகின்றனர். 1991-ம் ஆண்டு, திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்’ என அப்போதைய தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர் கரியாலி அறிவித்தார். அந்த அறிவிப்போடு திண்டிவனம் பேருந்து நிலைய பணிகள் நின்றுபோயின.
திண்டிவனம் பேருந்து நிலையம் - Tindivanam New Bus Stand Location
இதைத் தொடா்ந்து, பேருந்து நிலையத்துக்கான இடத்தைத் தோ்வு செய்வதில் அரசியல் கட்சியினரிடையே நீடித்த கருத்தொற்றுமை இன்மையால் புதிய பேருந்து நிலையப் பணி என்பது தொடா்ந்து தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் பரப்பளவில் திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என அறிவித்தார். அந்த வகையில், தற்போது திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நிறைவு பகுதியை எட்டியுள்ளது.
புதிய பேருந்து நிலையத்தில், 3,110 ச.மீ பரப்பளவில் பேருந்து நிலையம் கட்டிடம், 3,338 ச.மீ பரப்பளவில் பேருந்து நிறுத்தங்கள், 1000 ச.மீ பரப்பளவில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 300 ச.மீ பரப்பளவில் கட்டண கழிப்பறைகள் மற்றும் இலவச சிறுநீர் கழிப்பிடம், 300 ச.மீ பரப்பளவில் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி அமைய உள்ளது. எதிர்காலத்தில் விரிவுபடுத்துவதற்காக ஏக்கர் காலியிடம் 1 விடப்பட்டுள்ளது.
பேருந்து நிலைய வளாகத்தில், 50 பேருந்து நிறுத்தங்கள், 61 கடைகள், - 4 - தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம், 1 - சைவ உணவகம், 1 - அசைவ உணவகம், 1- பொருள்கள் வைப்பறை, 10 - காத்திருப்பு கூடம், 6 - நேரக்காப்பகம், 1 - காவல்துறை கட்டுப்பாட்டு அறை, 1 - நான் உங்களுக்கு உதவலாமா அறை, 1 - பேருந்து முன்பதிவறை, 1 இரயில் முன்பதிவறை, 1 -ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வறை, 2 தொகுதி மாற்றுத்திறனாளிகள் ஓய்வறை, 3 தொகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை, 1 - சுகாதார பிரிவு அலுவலகம், 2 - இலவச சிறுநீர் கழிப்பிடம், 1 - நிர்வாக அறை, 1- பதிவறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதியும் பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது.
பஸ் நிலையத்தில் தார் சாலை போடும் பணிகள், பெயிண்டிங் வேலை உள்ளிட்ட வேலைகள் மட்டும் முடியாமல் உள்ளது. அனைத்து பணிகளும் இந்த மாத இறுதிக்குள் முடிந்துவிடும். எனவே வட மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பகுதியாக செயல்பட்டு வரும் திண்டிவனம் நகரம் தற்பொழுது புது பொலிவுடன் பொதுமக்களுக்கு விருந்தளிக்க தயாராக உள்ளது. போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டாலும் பேருந்துகள் நிற்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது அதற்கு முற்றுப்புள்ளி ஆக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் முதல் பொதுமக்கள் வரை மகிழ்ச்சியாக உள்ளனர்.