கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி விடுமுறை நாட்களில் பெற்றோரை சந்திக்க செல்வார். இந்நிலையில், கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கண்ட விடுதி காவலர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மாணவி பள்ளி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சின்னசேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவியின் பிரேதத்தை உடற் கூறாய்வு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவி உயிரிழந்தது தொடர்பாக நீதி கிடைக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, அங்கு நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர். மேலும் டிராக்டர் மூலம் பள்ளிக்கு சொந்தமான பஸ்களை இடித்து சேதப்படுத்தினர். இதுகுறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர். மேலும் கலவரம் சம்பந்தமான வீடியோ, புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு தொடர்புடைய நபர்களை கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பள்ளியில் நடந்த கலவரத்தில் டிராக்டர் மூலம் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை இடித்து சேதப்படுத்தியது தொடர்பாக சின்னசேலம் தாலுகா பங்காரம் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் மகன் ஜெயவேல்(வயது 22) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதையறிந்த ஜெயவேல் நேற்று கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் நீதி மன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு முகமது அலி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயவேலை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்