தமிழகத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கபட்ட பயிர்களுக்கு மீண்டும் கணக்கீடு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் வட்டாச்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறுகையில், புதுடெல்லியில் ஓர் ஆண்டாக 3 வேளாண்மை சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக போராட்டம் நடத்தியதில், வேளாண் சட்டம் திரும்பப் பெறுவதாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இருந்தபோதிலும் விவசாயிகள் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான புதிய சட்டம், மின்சார திருத்த சட்ட மசோதா திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 2 கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு குறிப்பிட்ட சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளதால் விவசாய சங்கத்தினருக்குள் சூழ்ச்சியை ஏற்படுத்தி பிரிவினையை தூண்ட முயற்சிக்கிறது.
தற்போது நடைபெறுகின்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவசாய போராட்டத்தில் விவசாயிகள் யாரும் இறக்கவில்லை என வேளாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்து இருப்பது வன்மையாக கண்டிக்கிறோம். விவசாயிகள் இறந்தது தொடர்பாக அவர்களது பெயர் மற்றும் முகவரியுடன் முழு விவரத்தை தெரியப்படுத்துகிறோம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி யார்? இறந்து இருக்கிறார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். பின்னர் அதன் அடிப்படையில் அவர்களது குடும்பத்திற்கு நிவாரண நிதி உதவி, அரசு வேலை போன்றவற்றை வழங்க வேண்டும். மேலும் கடந்த 1 ஆம் தேதி வெளிவந்த துக்ளக் பத்திரிக்கையில் விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் ஒரு கேலி சித்திரத்தை வெளியிட்டு இருப்பது கண்டனத்திற்குரியது, மேலும் இதுகுறித்து துக்லக் பத்திரிக்கை விவசாயிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அதுமட்டும் இன்றி விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்திய துக்ளக் பத்திரிக்கையை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக மழைபெய்த காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் உட்புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவித்திருந்தது வரவேற்கத்தக்கதாகும். ஆனால் நிவாரண உதவிகள் எதுவும் அரசு தொடர்பாக அறிவிக்காதது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் தமிழகத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கர் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு அரசு மிகக்குறைவாக அறிவித்து வருகின்றனர். உண்மையான பாதிப்பை தெரியப்படுத்தாமல் அரசு அதிகாரிகள் கொடுக்கும் விவரத்தை தமிழக அரசு கூறி ஏமாற்றி வருகின்றனர்.
மேலும் மழையால் பாதிக்கப்பால் 4 ஆயிரத்து 625 கோடி நிவாரணம் தொகையை மத்திய அரசிடம் தெரிவித்து நிவாரணம் கேட்டு உள்ளனர். ஆனால் தமிழகத்தில் பயிர் பாதிப்புகள் மட்டும் சுமார் 5 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக திமுக அரசு அனைத்தும் தெரிந்துகொண்டும் கணக்கெடுப்பு குறைவாக எடுத்து, குறைவான தொகை கேட்டிருப்பதும், அந்த தொகை பெறுவதற்கு தமிழக அரசு அழுத்தம் தராதது அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமின்றி தற்போது தமிழக அரசு அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிருக்கு 20 ஆயிரமும், மறு நடவு விவசாயிகள் செய்தால் ஏக்கருக்கு 2,400 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளனர். மறு நடவு என்பது டெல்டா மாவட்டங்களில் ஏற்கக் கூடியதாக இல்லை. ஏனென்றால் ஜனவரி 28ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டு தண்ணீர் வழங்காது. அப்போது டெல்டா மாவட்டங்களில் மறு நடவு செய்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். இதன் காரணமாக கடும் அதிருப்தியில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர் மழை வெள்ளம் காரணமாக பல்லாயிரம் கால்நடைகள் இறந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் போடவேண்டிய கோமாரி நோய் பரவலை தடுப்பதற்கு போடக்கூடிய தடுப்பூசி போடாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோமாரி நோயால் கால்நடைகள் இறந்துள்ளன. இதுதொடர்பாக கால்நடை துறை செயலாளர் மத்திய அரசிடம் கோமாரி நோய் தொடர்பாக தடுப்பூசி கேட்டுள்ளோம் என மெத்தனமாக பதில் அளித்துள்ளார். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தமிழகத்தில் பால் உற்பத்தி குறைந்து உள்ளது. இதற்கு தமிழக அரசு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார். அப்போது மாவட்ட செயலாளர் மாதவன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.