விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில் பேய் நடமாடுவது போன்ற வீடியோ மற்றும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்து உள்ளார்.


சாலையில் செல்லும்போது திடீரென வெள்ளை நிற உடை உடுத்தி அவ்வப்போது ஓட்டுநர்களை கதிகலங்க வைக்கும் நிகழ்வுகளின் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் குவிந்து கிடக்கிறது. உண்மைகளை விட சுவாரஸ்யமான பொய்கள் வேகமாகப் பரவுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில், அப்பாவி மக்களை பதற வைக்கும் ஒரு வீடியோ சமீப நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.


ஏராளமான அமானுஷ்ய கட்டுக்கதைகள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றன. இறந்தவர்கள் பேயாக உலா வருவதாகவும், அவர்கள் மற்றொருவரும் உடலில் புகுந்து தொந்தரவு கொடுப்பதாகவும் வைரல் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. திகிலூட்டும் ஹாலிவுட் ஹாரர் திரைப்படங்கள் அமானுஷ்ய கட்டுக்கதைகளை கொண்டே தயாரிக்கப்படுகின்றன. எனினும், பேய் என்ற ஒன்று இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கு என்றும் விடை கிடைத்ததில்லை. அறிவியல் அமானுஷ்யம் இல்லை என்றபோதிலும் எங்கோ ஓரிடத்தில் கண்ணிற்கு புலப்படாத சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.


இந்த நிலையில் தான் கூட்டேரிப்பட்டு பகுதியில் பேய் நடமாடுவது போன்ற வீடியோ மற்றும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இதனால், நள்ளிரவில் செல்லும் பொதுமக்கள் கூட்டேரிப்பட்டு பகுதியில் பேய் இருப்பதாக எண்ணி அச்சத்தில் இருந்தனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் நள்ளிரவு நேரத்தில் வெளியே வராமல் அச்சம் அடைந்து வந்தனர். பேய் இருக்கும் வீடியோ விழுப்புரம் மாவட்டத்தில் சமூக வலைதளத்தில் அதிக அளவில் பரவியது. 


பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உண்மை கண்டறியும் குழு இதனை கையில் எடுத்தது. உண்மை கண்டறியும் குழு விசாரணை செய்ததில்..


இது முற்றிலும் வதந்தி எனவும் பேய் நடமாடுவதாக பரப்பப்படும் புகைப்படம் மற்றும் காணொளி கடந்த ஜூலை மாதம் உத்திரபிரதேச மாநிலம் அமோதியில் நடந்ததாக கூறி பரவியது. இது குறித்து விசாரணை நடத்திய உத்தரபிரதேச காவல்துறை இருப்பதாக கூறப்படும் சம்பவம் பொய்யானது என்று விளக்கம் அளித்தனர். ஆனால் தற்பொழுது இது விழுப்புரத்தில் நடப்பதாக கூறி வதந்தியை பரப்பியுள்ளனர். இது முழுவதும் வதந்தியே என தமிழக அரசின் உண்மை கண்டறியும் தகவல் அதிகம் குழு விளக்கம் அளித்துள்ளது.


கடந்த ஆண்டு இதே போன்று, மரக்காணத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் நடந்து செல்வதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலானது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து காக்காபாளையம் செல்லும் வழியில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. இரவு நேரத்தில் அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சிலர், வெள்ளை நிற உடையில் அமானுஷ்ய உருவம் ஒன்று நடந்து செல்வதை பார்த்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் அந்த அமானுஷ்ய உருவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். 30 விநாடிகள் வரை எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் வெள்ளை உருவம் நடந்து செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. பேய் உலவுவதாக பகிரப்படும் இந்த வீடியோ  இணையத்தில் வைரலனது குறிப்பிடத்தக்கது.