விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மாதிரிப் பள்ளியின் செயல்பாட்டினை திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். மாணவர்களின் வருகை, விடுதி வசதி, சமையல் கூடம், மாணவர் தங்கும் அறை, உணவுக்கூடம், மளிகைப் பொருட்களின் இருப்பு உள்ளிட்டவற்றை நேரில் பார்த்து, அதுபற்றிய விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்


மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்:


தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10 மணியளவில் அரசுத்துறை அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


மாதிரிப் பள்ளியின் செயல்பாட்டினை திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர்


விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலமேடு பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில், விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி உண்டு, உறைவிட பள்ளி செயல்பட்டு வருகின்றது. பள்ளி தகவல் தொகுப்பு மேலாண்மை அமைப்பின் (எமிஸ்) மூலமாக பெறப்பட்ட தகவல்களில், மாணவ, மாணவிகளின் கல்வித் தகுதிகளின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு பள்ளிகளைச் சேர்ந்த சிறந்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஐ.ஐ.டி. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் பயில பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே விடுதி வசதியும் செய்யப்பட்டுள்ளது.


9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வரும் இப்பள்ளியில் மொத்தம் 287 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். உண்டு உறைவிட வசதியுடன் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் 181 மாணவ, மாணவியர்கள் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயின்று வருகின்றார்கள்.


மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையை சரிபார்த்த துணை முதல்வர்


இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட துணை முதலமைச்சர் அவர்கள் வருகை பதிவேட்டினை பார்வையிட்டு தங்கியுள்ள மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையை சரிபார்த்தார். மேலும் விடுதியின். சமையற்கூடம். மாணவ, மாணவியர்கள் தங்குமிடம் ஆகியவற்றை பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடி கற்றல் திறன் மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


'நன்கு கல்வி பயில வாழ்த்து'


அதனடிப்படையில் மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கில அகராதி (English Dictionary) மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மாணவ, மாணவியர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்தி, நாட்டின் தலை சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் இடம் பெறும் வகையில் நன்கு கல்வி பயில வாழ்த்து தெரிவித்தார்.


மேலும் துணை முதலமைச்சர் அவர்கள், விடுதியில் குடிநீர் வசதி, சமையலறை, கழிப்பிட வசதிகளையும். பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி அமைப்பின் பதிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உணவுப் பொருட்களின் இருப்பு குறித்தும், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளின் விவரங்கள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் முனைவர்.க.பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் இரா.இலட்சுமணன் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் மருத்துவர் தாரேஸ் அஹமது, மாவட்ட ஆட்சியர் சி.பழனி , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்பட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.