விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் கிடாவினை உறங்க வைத்து வெட்டி குடலை மாலையாக அணிந்து கொண்டு ஊர் எல்லைகளை சுற்றி வரும் வினோத திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அடுத்த எஸ். மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஆண்டு தோறும் வைகாசி  மாதம் கனகதண்டி மகா மாரியம்மனுக்கு 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 25  ஆம் தேதி இரவு மாரியம்மனுக்கு  கொடியேற்றத்துடன் 10 நாட்கள் உற்சவம் தொடங்கி தினமும் இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்டு ஊரை சுற்றி வந்து தீபாரதனை காண்பிக்கபட்டு வந்தன. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான இரவு கனகதண்டி அம்மன் கோவில் வாயிலில் போலரக்கா பாட்டு பாடி  கிடா ஆட்டினை உடுக்கை அடித்து  உறங்க வைத்து கிடா வெட்டி உறங்க வைத்தனர்.


கிடா உறங்கியபின் கிடாவின் மீது தண்ணீர் தெளித்து ஆட்டு கிடாவினை வெட்டி குடலினை உறுவி ஊதி பத்து நாட்கள் விரதமிருந்த நபர் மாலையாக கழுத்தில் அணிவிந்து கொண்டு இரவு ஊர் எல்லைகளை சுற்றி வந்து ஒவ்வொரு எல்லை பகுதிகளிலும் ஆட்டு கிடா குடலினை புதைத்து விட்டு வரும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மறு நாளே மழை பெய்யும் ஐதீகம் இருந்து வருகிற நிலையில் வினோத வழிபாட்டினை காண அருகிலுள்ள கிராமங்களான பரசுரெட்டிப்பாளையம், கொங்கம்பட்டு, குமாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த  ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வினோதமாக கொண்டாடப்படும் இத்திருவிழாவில் வெட்ப்படும் ஆட்டின் ரத்த சோற்றிணை பருகினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளதால் குழந்தை பாக்கயம் இல்லாதவர்கள் மடியேந்தி ரத்த சாப்பாட்டினை வாங்கி சென்றனர். திருவிழாவினை முன்னிட்டு பத்து நாட்களும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு வீதிவுலா நடைபெற்றன.