சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றிடும் வகையிலும், வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரை இன்றைய தலைமுறையினர் அறிந்திடும் வகையிலும், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புகைப்பட கண்காட்சி வாகனம் அமைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த வாகனம் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கடலூர் வந்து அடைந்தது. வாகனம் ஆனது கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளிக்கு வந்த இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியர் வரவேற்று, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ- மாணவிகள் பயன் பெறும் வகையில் இந்த வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக வாகனத்தில் இருந்த வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து, அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு பள்ளி மாணவர்கள் சிலருக்கு வ.உ.சிதம்பாரனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை எடுத்து உரைத்தார். பின்னர் அதனை தொடர்ந்து மற்ற பள்ளி மாணவர்கள், இந்த வாகனத்தில் வ.உ.சிதம்பரனார் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த வாகனம் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யபட்டு உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டு அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது. விடுதலைக்காக அவர் ஆற்றிய பங்கு, அவர் சிறையில் அடைக்கப்பட்ட காலங்கள் குறித்த எழுத்துக்கள், அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த குறிப்புகள் மற்றும் வ.உ.சிதம்பரனாரின் அரியவகை புகைப்படங்கள் இந்த வாகனத்தில் அனைவரது பார்வைக்கும் அமைக்கப்பட்டு உள்ளது. வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை பரை சாற்றும் வகையில் அணிந்து உள்ள இந்த நகரும் புகைப்பட கண்காட்சி பெரும் அளவில் பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது என ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி மற்றும் அலுவலர்கள், மாணவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.