130 கி.மீ வேகம்.. இனி திருச்சி-விழுப்புரம் 1.30 மணி நேரம் தான்... சீறப்போகும் ரயில்கள்
Villupuram Trichy Train:விழுப்புரம்-திருச்சி இரட்டை வழித்தடப் பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை மணிக்கு 110 கி.மீட்டரிலிருந்து 130 கி.மீட்டராக அதிகரிக்கும் பணியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது.

விழுப்புரம்-திருச்சி வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பணியில் தெற்கு ரயில்வே ஈடுப்பட்டு வருகிறது.
சென்னை-திருச்சி வழித்தடம்:
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக சென்னை-திருச்சி ரயில் பாதை உள்ளது, இதில் மையின் லைன் மற்றும் கார்ட் லைன் என இரண்டு பாதைகள் உள்ளது. மையின் லைன் விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக திருச்சியை இணைக்கிறது, இதன் தூரமும் அதிகமாகும், ,மற்றொரு பாதையான கார்ட் லைன் விழுப்புரத்திலிருந்து விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீ ரங்கம் வழியாக திருச்சிக்கு செல்லாம். இந்த பாதையில்
வேகத்தை அதிகரிக்கும் பணி:
தற்போது விருத்தாசலம், அரியலூர், லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் வழியாக விழுப்புரம்-திருச்சி இரட்டை வழித்தடப் பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை மணிக்கு 110 கி.மீட்டரிலிருந்து 130 கி.மீட்டராக அதிகரிக்கும் பணியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. இதற்காக 170 கி.மீ. நீளம் கொண்ட விழுப்புரம்-திருச்சி மின்மயமாக்கப்பட்ட பாதையில் வேகத்தை அதிகரிப்பதற்கு முன்னதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பல பணிகளை அடையாளம் கண்டுள்ளனர். இந்தப் பாதையில் பெரிய மற்றும் சிறிய பாலங்கள், லெவல்-கிராசிங், சிக்னல்கள், வரையறுக்கப்பட்ட பயன்பாட்டு சுரங்கப்பாதைகள் மற்றும் வழியில் லூப் லைன்கள் உள்ளன.
விழுப்புரம் முதல் விருத்தாசலம் வரையிலும், விருத்தாசலம் முதல் திருச்சி வரையிலும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும். ரயில்களின் வேக வரம்பை அதிகரிப்பதற்கான பணிகளைச் செயல்படுத்துவதில் பொறியியல், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு துறைகள் முக்கியமாக ஈடுபட உள்ளன.
பணிகள் தொடக்கம்:
ரயில்களின் வழக்கமான இயக்கத்தை பாதிக்காத வகையில் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகளில் ஒன்று, தண்டவாளங்களில் ஆழமாக கற்களை நிரப்பி சுமுகமான பயணத்தை தரவும், 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு ஏற்றவாறு பிரிவில் உள்ள வளைவுகளை தளர்த்த வேண்டும் என்றும் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவதைத் தடுக்க பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வேலி அமைப்பது மற்றொரு பணியாகும்.
சிக்னல் நிறுவும் பணிகள்:
இந்தப்பாதையில் விழுப்புரம் முதல் விருத்தாசலம் வரை இரட்டை சிக்னல்களை நிறுவும் பணி நிறைவடையும் தருவாயில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விருத்தாசலம் முதல் சில்லக்குடி வரையிலும், அதன் பிறகு சில்லக்குடி முதல் திருச்சி வரையிலும் இரட்டை தொலைதூர சிக்னல்களை நிறுவும் பணியை ரயில்வே அதிகாரிகள் மேற்கொள்வார்கள். ரயில்களின் வேகமான இயக்கத்தையும் அவற்றின் பாதுகாப்பான செயல்பாடுகளையும் செயல்படுத்த இரட்டை தொலைதூர சிக்னல்களை நிறுவுவது அவசியம். மேலும் நீண்ட பகுதிகளுக்கு இடைநிலை பிளாக் சிக்னல்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணிகள் எப்போது முடியும்?
இந்த பணிகள் அடுத்த நிதியாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த பணிகள் நிறைவடைந்தால் இந்த பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, தற்போது இந்த பாதையில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் 2 மணி நேரத்தில் விழுப்புரத்தில் இருந்து திருச்சிக்கு செல்கிறது, ஆனால் இந்த பணிகள் முடிவடைந்தால் 1.30 மணி நேரத்திற்குள் திருச்சியை அடையலாம் என்று சொல்லப்படுகிறது. அதே போல இந்த பாதையில் இயக்கப்படும் அனந்தபுரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ், நெல்லை, முத்துநகர் போன்ற தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகமும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.






















