விழுப்புரம்: திண்டிவனம் இரயில்  நிலையத்தில் சென்னையில் இருந்து கடத்திவரப்பட்ட அரை கிலோ கஞ்சா பறிமுதல், இளஞ்செழியன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.


ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இரயில் மூலம் கஞ்சா கடத்திவரப்பட்டு விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இரயில் மூலம் கஞ்சா கடத்திவரப்படுவதாக திண்டிவனம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாலை காவல்துறையினர் திண்டிவனம் இரயில் நிலையத்தில் திண்டிவனம் நகர காவல் உதவி ஆய்வாளர் செந்தில் முருகன் மற்றும் காவலர் கார்த்தி ஆகிய இருவரும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்,


அப்போது அந்த இளைஞர் கையில் வைத்திருந்த பையை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். அதில் அரை கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிய வந்தது. அவனை போலீசார் சிறிது தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர், போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.


மேலும், அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த இளஞ்செழியன்(21) என்பதும் சென்னையில் இருந்து இரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனைக்காக திருவண்ணாமலை கொண்டு செல்வதும் தெரியவந்தது. இந்நிலையில் இளஞ்செழியனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.


வெளிநாடுகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்குள் வித விதமான போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. ஏராளமான இளைஞர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்களும் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி வருவாதால் விழுப்புரம் மாவட்ட போலீசார் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.