பொதுவாக கிராமங்களில் இயற்கை வளங்கள் அதிகம் செழித்து இருப்பதற்கு முக்கிய காரணமே அங்கு உள்ள ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர் நிலைகள் தான். இவை நிலத்தடி நீரின் அளவினை குறையாமல் தக்கவைத்து கொள்வதால் தான் கோடை காலங்களிலும், கிராம பகுதிகளில் எந்த வறட்சியும் ஏற்படுவது இல்லை.


தூர்வாருதல்:


நமது முன்னோர்கள் மழை பருவ காலங்களில் பெய்யக்கூடிய மழை நீரை இது போன்ற நீர் நிலைகளில் சேமித்து வைத்து  கிராமம் முழுவதுமே விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், வாய்க்கால்கள் வெட்டி நீர் பாசன திட்டங்களை உருவாக்கி நீர் மேலாண்மையில் முன்மாதிரியாக திகழ்ந்தனர். மழைக்காலங்களில் கிடைக்கக்கூடிய நீரினை வீணாக்காமல் சேமித்து நிலத்தடி நீரினை பாதுகாப்பதோடு விவசாயத்திற்கு பயன்படுத்தவே ஏரி குளம் போன்ற பகுதிகளை பருவ காலத்திற்கு முன்னதாக தூர்வாரி தயார்படுத்துகிறது.


17 லட்சம் செலவு:


ஆனால் விழுப்புரம் அடுத்த கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இளங்காடு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த எடையான் குளத்தினை சீரமைத்து தூர்வார தமிழ்நாடு ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு ரூபாய் 15 லட்சம் ( ஜிஎஸ்டி வரித் தொகையுடன் 17 லட்சம்) ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒதுக்கப்பட்ட தொகைக்கு உரிய எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என இளங்காடு கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்


ஏற்கனவே இருந்த குளத்தின் அகலத்தை மூன்று அடிவரையில் குறைத்து குளத்தின் அளவை சுருக்கி உள்ளதாகவும் 15 அடிக்கு மேல் ஆழமுள்ள குளத்தினை முழுவதுமாக ஜேசிபி போன்ற இயந்திரங்களை வைத்து தூர் வாராமல் பெயரளவுக்கு குளத்தின் ஒருபுறம் மட்டும் கரையை பலப்படுத்துவதற்காக  இரண்டடி சிமெண்ட் கட்டைகள்  மற்றும் மதகுகள் அவசரகதியில் தரமற்று அமைக்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர். ஏற்கனவே இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


பணி முடிந்ததாக கணக்கு:


கடந்த வாரம் இந்த சீரமைப்பு பணிகள் முடிவுற்றதை குறிக்கும் வகையில் அங்கு புதிய சிமெண்ட் கான்கிரீட் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது அதில் 17 லட்சம் ரூபாய்க்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இது கிராம மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் வைக்கப்பட்ட பெயர் பலகை கூட தரமாக இல்லை படிக்கட்டுகள் அதற்குள் விரிசல் அடைந்து தண்ணீருக்குள் விழும் நிலை உள்ளது குளத்தின் ஆழமே தற்போது இரண்டரை அடிதான் (2.5 அடி) இருக்கும். எதற்காக இந்த தூர்வாரும் பணி இவ்வளவு தொகையில் நடைபெற்றது. ஒப்பந்த அடிப்படையில் பணிகள் நடைபெற்றாலும் மக்கள் வரி பணத்தை கொண்டு செய்யப்படும்  பணிகளை துறை சார்ந்த அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள மாட்டார்களா?  என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காய் வைக்கின்றனர்.


அலுவலக கோப்புகளில் குளம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டிருந்தாலும் உண்மையிலேயே அந்தக் குளத்தில் அப்படி ஒரு பணி நடைபெறவில்லை என்பதே நீர் நிலை ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது விரைவில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குளத்தினை மீண்டும் ஆய்வு செய்து மறு சீரமைப்பு செய்ய உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே இயற்கை நீர் நிலைகள் காப்பாற்றுவதோடு விவசாயத்தையும் பாதுகாக்க முடியும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.