விழுப்புரம்: ஃபெஞ்சல் பாதிப்பிலிருந்து விழுப்புரம் மாவட்டம் இரண்டு தினங்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என வருவாய் மற்றும் பேரிடல் மேலாணமை முதன்மை செயலர் அமுதா தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணமாக ரூ.2000 மற்றும் 5 கிலோ அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கிட அறிவுறுத்தப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றைய தினம் முதல் பெஞ்சல் புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணத் தொகை ரூ.2000 மற்றும் 5 கிலோ அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம், அனைத்து நியாய விலைக்கடைகள் மூலமாக நிவாரணத்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கிடும் வகையில் உறுதிச்சீட்டு (டோக்கன்) வழங்கப்பட்டு வருகிறது.
நியாய விலைக்கடைகளில் நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்காக 5 கிலோ அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் பாக்கெட் செய்து நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், வி.சாலை, திண்டிவனம், செஞ்சி, வானூர் மற்றும் கண்டாச்சிபுரம் ஆகிய 6 சேமிப்பு கிடங்குகளில் வெளிமாவட்டங்களிலிருந்து மண்டல மேலாளர்கள்; நியமிக்கப்பட்டு அவர்கள் மேற்பார்வையில் நிவாரணப்பொருட்கள் பாக்கெட் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒரு நாளைக்கு 6 கிடங்குகளில் சுமார் 40000 பாக்கெட்கள் என்ற அளவில் பாக்கெட் செய்யப்பட்டு வருகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் பாக்கெட் செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வழங்கிடும் வகையில் மின்பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கான மின் இணைப்பு வழங்குவதற்காக மின் பாதிப்புகள் சரிசெய்யும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஒரிரு நாட்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.
பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால், உணவுகள் சமைத்து வழங்கப்படுவது குறைந்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 17000 உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை உணவு 9000 காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த பகுதிகளில் இயல்புநிலை திரும்பாமல் மக்கள் தங்களுக்கு உணவு தேவைப்படுகிறது என்கிறார்களோ அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உணவு தயாரித்து வழங்கப்படும் என அரசு முதன்மைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமுதா தெரிவித்தார்.