சனிப்பெயர்ச்சி:


நவகிரகங்களில் அவரவர்களின் கர்ம வினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகம் சனி ஆகும். பொதுவாக சனி கொடுப்பதையும், கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது. இந்த சனிப்பெயர்ச்சியானது ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர எடுத்துக் கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும். அந்த வகையில் இன்று  மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்க உள்ளார். 


இந்த சனிப்பெயர்ச்சியானது காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெறும். சனிப்பெயர்ச்சியானது நடைபெறும்போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், அஷ்டோத்திர அர்ச்சனை, சகஸ்கர நாம அர்ச்சனை, தீப வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது. 


வாலீஸ்வரமுடையநாயனார் கோவிலில் சனி பெயர்ச்சி


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில்,  அமைந்துள்ள வாலீஸ்வரமுடையநாயனார் கோவிலில் சனி பெயர்ச்சி மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. நிகழும் சோபக்ருத் வருஷம், மார்கழி மாதம் 04-ந் தேதி புதன்கிழமை மாலை மணி 5.20 க்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். அதே சமயம் மேற்கு பார்த்த சிவாலயமான, ஸ்ரீ ப்ரஹன் நாயகி அம்பிகா சமேத வாலீஸ்வரமுடையநாயனார் திருக்கோயிலில், இராமாயணகாலத்தில் ஸ்ரீ வாலியினால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஸ்ரீ கூர்மாங்க சனீஸ்வரர் என்னும் திருநாமம் கொண்டு, பக்தர்களின் ஸங்கடங்களை நீக்கியருளி தீர்க்காயுளையும், பொன்னையும், பொருளையும், வெற்றியையும் வாரி வழங்குவதாக பக்தர்களின் நம்புகின்றனர்.


வள்ளல் பிரானாக, ஸ்தல விருக்ஷம் வன்னிமரத்தடியில், தமிழகத்தில் எங்கும் இல்லா வகையில் ஸ்ரீ சங்கடஹர வலம்புரி வினாயகர் துணையிருக்க, திருநள்ளாருக்கு நிகரான பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்குகிறது இக் கோயில் நவக்ரஹங்களில் ஸ்ரீ சனிஸ்வர பகவான் ஒரு முக்கியமாக விளங்குகிறார்.நமக்கெல்லாம் அறிவையும், தீர்க்க ஆயுளையும் அருளும் தெய்வமாக  சனிபகவான் திகழ்கிறார். அவரை வணங்குவதன்மூலம் ஒருவருடைய ஜாதகத்தில் சனியினால் ஏற்படும் தோஷங்களும், துன்பங்களும் இறைவன் அருளால் நீங்குவதாக ஐதீகம்.


வானவியல் சாஸ்திரப்படி ராசி மண்டலத்தில், இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். அந்தநாள் சனிப்பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன் பொருட்டு பக்தர்கள் அனைவரும் திரளாக வந்திருந்து ஸ்ரீ சனிஸ்வர பகவானின் பேரருள் பெற கோவில் நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் இந்த சனி பெயர்ச்சியில் எல்லா ராசிகளுக்கும் மாற்றம் ஏற்படும் நாளாக விளங்குகிறது. மேஷம் ராசிக்கு 11 ஆவது இடமாக லாப ஸ்தானமாக அமைகிறார், ரிஷப ராசிக்கு 10 வது இடத்திலும், மிதுனம் ராசிக்கு 9 வது இடத்திலும், கடக ராசிக்கு அஷ்டமாசனியாக 8 வது இடத்திலும், சிம்ம ராசியில் ஏழாவது இடத்திலும், கன்னி ராசியில் ஆறாவது இடத்தையும், துலாம் ராசிக்கு 5 ஆம் இடத்திலும், விருச்சிக ராசிக்கு 4ஆம் இடத்திலும், தனுசு ராசிக்கு ஏழரை சனியிலிருந்து விடுதலை அடைந்து  மூன்றாம்இடத்திலும்,மகர ராசிக்கு பாத சனியாகவும், மீனம் ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம் ஆகிறது என அர்ச்சகர் சிவகுரு கூறினார். சனிப்பெயர்ச்சியின் போது ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மாற்றம் நடைபெறும்.எனவே அந்தந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு ஏற்றார் போல வழிபாடு நடத்தி பலனை அடைய வேண்டும் என  கூறினார்