முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் வேறு ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன்  பேட்டியளித்துள்ளார்.


இதுதொடர்பாக அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:


புதுச்சேரி மாநில அந்தஸ்துக்கு அதிமுகவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போதும் எடப்பாடி பழனிசாமி இருந்த போதும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக முதலமைச்சர் ரங்கசாமி ஒரு சிறு துரும்ப கூட கிள்ளி போட்டது இல்லை என்றும் அவருக்கு எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் மாநில அந்தஸ்து பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்வதாக குற்றம் சாட்டினார். மாநில அந்தஸ்து என்று கூறி பொது மக்களையும் அரசியல்  கட்சிகளையும் போராட்டம் நடத்த தூண்டி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர் புதுச்சேரி குட்டிச்சுவரானதுக்கு ரங்கசாமியே காரணம் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.


இதுவரை ஒரு நாள் கூட டெல்லி சென்று மாநில அந்தஸ்து பற்றி வலியுறுத்தியது இல்லை. கேட்டால் தான் கிடைக்கும், சட்டசபையில் போட்ட தீர்மான கோப்புகள் என்ன ஆச்சு, துணை நிலை ஆளுநர் ஒரு கோப்பை கூட நிறுத்தவில்லை என்று கூறுகிறார் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய வையாபுரி மணிகண்டன். இதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றால்  அதிகாரிகள் சரியில்லை என்று குற்றம் சொல்வதாகவும், அதிகாரம் இல்லை என்று மாநில அந்தஸ்து வேண்டும் என்று புலம்பும் முதலமைச்சர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க தயாரா எனவும் கேள்வி எழுப்பினர்.


முதலமைச்சரங்கசாமி வேஷம் போடுகிறார் அவரை வேஷத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். தொடர்ந்து இதேபோன்று மக்கள் மத்தியில் ரங்கசாமி நாடகம் நடத்தினால் டெபாசிட் இழக்க கூடிய நிலை ஏற்படும். ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் முதலமைச்சர் தனப் பதவியை ராஜினாமா செய்து விட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் வேறு ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதுதான் அதிமுக நிலைபாடு. ஆனால் அதை வைத்து யாரும் நாடகம் நடத்தக்கூடாது என்றார்.