புதுச்சேரி: மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
 
புதுச்சேரியின் 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட்டில், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் இலக்காகக் கொண்ட பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமை (மார்ச் 12, 2025) தாக்கல் செய்தார்.
 
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (பிபிஎல்) பிரிவில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவியை 1,000 லிருந்து 2,500 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது என்றார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் வரும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் மாதாந்திர முதியோர் ஓய்வூதியம் 500 அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் புதுச்சேரி மக்களை பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட்டு மாநில வருவாயை உயர்த்தப்படும்.  நல்ல பட்ஜெட்டை நாம் கொடுத்துள்ளோம். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். புதுச்சேரி மாநில மக்கள் வளர்ச்சிக்காக அனைத்து தொகுதிகளிலும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் சேதராப்பட்டில் தொழிற்பேட்டை கொண்டுவரப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். 
 
புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, அரசின் எந்த நலத்திட்ட உதவிகளையும் பெறாத மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய். 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஏற்கனவே சிவப்பு அட்டை வைத்துள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ. 2500 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் அறிவித்துள்ளார்.
 
தொடர்ந்து, பணியின்போது இறந்த அரசு ஊழியர்களது குடும்பங்கள் ரொம்ப கஷ்டமான சூழலில் இருக்கின்றனர். இறந்த வாரிசுதாரர்களின் 500 பேர் வரை உள்ளனர். எனவே, அவர்களை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது தொடர்பான ஒரு கொள்கை முடிவு விரைவில் அறிவிக்கப்படும். இது தொடர்பாக நிர்வாக சீர்த்திருத்த துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்களை எம்.டி.எஸ்., எனப்படும் பல்நோக்கு ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.