"மக்களுக்கு ஒரு சட்டம்.. முதல்வருக்கு ஒரு சட்டமா.. " சட்டத்தை மதிக்காத தொண்டர்கள்.. கடுப்பில் மக்கள்
பொது மக்களுக்கு இடையூறாகவும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பேனர்கள் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டம் அமலில் இருந்தும், அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் நகர் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்துள்ளது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
புதுவை முதல்வர் ரங்கசாமி:
கடந்த 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறந்தவர் ரங்கசாமி. தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் தொண்டரான இவர் இளம் வயதியிலே அவர் பெயரில் மன்றமும் தொடங்கியவர். இச்சூழலில், தான் இவரது பிறந்த நாளை ஆண்டுதோறும் அவரது தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரின் பிறந்தநாளின் போது கட்சி தொண்டர்கள் பிரபல ஹீரோக்களின் படங்களை வைத்து முதல்வர் ரங்கசாமியின் பேனர்களை வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பிறந்தநாள் விழா:
அந்தவகையில் இந்த ஆண்டு அதாவது ஆகஸ்ட் 4 ஆம் தேதி தன்னுடைய 75 வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இந்த நிலையில் தான் இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி முழுவதும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக அரசியல் கட்சித் தலைவர்களை, அவருடைய உருவ படங்களை மட்டுமே பேனர்களில் பயன்படுத்தி வாழ்த்து தெரிவிக்கும் சூழலில் ரங்கசாமி ஆதரவாளர்கள் திரைப்பட நடிகர்கள் உருவங்களில் ரங்கசாமியின் புகைப்படத்தை இணைத்து பேனர் வைத்துள்ளனர். அதன்படி, கூலி திரைப்பட ரஜினி பாணியில் முதல்வர் ரங்கசாமியின் படங்களை பேனர்களில் வைத்துள்ளனர்.
மக்கள் குற்றச்சாட்டு:
புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இச்சூழலில் தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கே இவ்வாறு பேனர் வைத்துள்ளது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. பொது மக்களுக்கு இடையூறாகவும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பேனர்கள் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல்வர் ரங்கசாமியும் இதனை கண்டிக்காமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.






















