அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்; இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய மீனவர்கள்
மீனவ மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை ஏற்று மீனவ மாணவர்கள் முழு கல்வி உதவித்தொகை பெற பணிகளை தொடங்கியுள்ளோம் - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவ சமுதாய மாணவர்களுக்கு விரைவில் இலவச கல்விநிதி தரும் பணிகளை அரசு துவக்கியுள்ளதாக, பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்ட பணிகள் தொடக்கவிழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மேலும் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு 3700 மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்ட பணிகள் தொடக்கவிழா, புதுச்சேரி மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கு ஆணை வழங்கும் விழா லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் பல்வேறு திட்டங்களை காணொளி மூலமாக திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நல திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஜெயகுமார், திருமுருகன், செல்வகணபதி எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன்...
மீனவர்களின் பாதுகாப்புக்காக பதிவு பெற்ற விசைப்படகுகளில் இலவச டிரான்ஸ்பாண்டர்கள் நாடு முழுவதும் ஒரு லட்சமும் புதுச்சேரி மீனவர்களுக்கு 3023 டிரான்ஸ்பாண்டர்களும் தரவுள்ளோம். இதன் மூலம் எல்லை தாண்டி மீன்பிடித்தால் தகவல் கிடைக்கும். பிரதம மந்திரியின் மீன்வளத்திட்டத்தில் புதுச்சேரிக்கு ரூ. 428 கோடியில் திட்டங்கள் நடக்கிறது. அதில் மத்திய அரசு ரூ. 378 கோடி அளிக்கிறது. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு 3700 மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி...
ஆதிதிராவிட மாணவர்களுக்கு முழு கல்வி நிதி உதவி வழங்கப்படுகிறது. இதேபோல மீனவ மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த கோரிக்கையையும் ஏற்று மீனவ மாணவர்கள் முழு கல்வி உதவித்தொகை பெற பணிகளை தொடங்கியுள்ளோம். மத்திய அரசு உதவி இருந்தால்தான் நாம் வளர்ச்சி அடைய முடியும். இதனால் மத்திய அரசு நிதியும், உதவியும் அவசியம். யூனியன் பிரதேசமான புதுவையின் அனைத்து துறைகளும் இதற்காக விரைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
மீனவர்களுக்கான நலத்திட்டங்கள்
மீனவர்களுக்கான நலத்திட்டங்களின் கீழ், இந்தத் துறை 6022 மீனவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம், சீரான மீன்பிடி தடைக் காலத்தில் நிதி உதவி, 20,400 மீனவ குடும்பங்களுக்கு இலவச ஆடை மற்றும் பண உதவி ஆகியவற்றை வழங்கி வருகிறது. மேலும், இறந்த முதியோர் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்குச் செலவுகளைச் சமாளிக்க ரூ.2,000/- நிதி உதவியும், காணாமல் போன மீனவர்கள் மற்றும் இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு முறையே ரூ.1,50,000/- மற்றும் ரூ.2,00,000/- நிதி உதவியும் வழங்குகிறது. மீனவர்களுக்கு மானிய விலையில் மீன்வளத் தேவைகளும் வழங்கப்படுகின்றன. பங்கு மூலதன பங்களிப்பு, கடன் மற்றும் மானிய உதவி மூலம் மீன்வள கூட்டுறவுகளை வலுப்படுத்துதல் மேற்கொள்ளப்படுகிறது.





















