புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை தள்ளிவிட்ட விவகாரத்தில் தொடர்புடைய காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் தேரோட்டம் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. விழாவில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், எதிர்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே தேரோட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாப்பு அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், அருகிலிருந்தவர்களை விலக்கும்போது, அங்கிருந்த முதல்வர் ரங்கசாமி மீது கை வைத்து தள்ளினார். சமூக வலைதளத்தில் இதுதொடர்பான வீடியோ பரவியது. முதல்வரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் குற்றம்சாட்டினர்.மேலும், சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர். இந்நிலையில் முதல்வரை தள்ளிவிட்ட, அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரை அப்பணியிலிருந்து விடுவித்து, ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்து புதுச்சேரி காவல் தலைமையகம் நேற்று மாலை உத்தரவிட்டது. இது குறித்து புதுச்சேரி எஸ்பி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கடந்த 11-ம் தேதியன்று வில்லியனூர் தேர் திருவிழாவின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஒரு காவல் அதிகாரி, பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிப்பதில் கவனக் குறைவாக செயல்பட்டது கண்டறியப்பட்டது.
இதனை தீவிரமாக கருதிய புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அதிகாரியின் நடத்தை மற்றும் சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி புதுச்சேரி காவல்துறை தலைமைக்கு உத்தரவிட்டார். ஆளுநரின் அறிவுறுத்தலின்படி, காவல்துறையானது குறிப்பிட்ட காவல் அதிகாரியை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 11-ம் தேதி அன்று வில்லியனூரில் நடைபெற்ற திருக்காமேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவின் போது, ஒரு முக்கிய பிரமுகரின் பாதுகாப்பு அதிகாரி, பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் கவனக் குறைவாக செயல்பட்டதாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்த அதிகாரியின் நடத்தை குறித்து உடனடியாக விசாரணை செய்து விளக்கம் அளிக்க, காவல்துறை இயக்குநருக்கு, ஆளுநர் உத்தரவிட்டார். மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது பொதுமக்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையூறு இல்லாமல், சரியாகத் திட்டமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். துணைநிலை ஆளுநரின் அறிவுறுத்தலுக்குப்பின், விசாரணை நடத்தி குறிப்பிட்ட பாதுகாப்பு அதிகாரியை புதுச்சேரி ஆயதப் படைக்கு இடமாற்றம் செய்து காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்