ரேஷன் கார்டுக்கு ரூ. 5,000! புதுச்சேரி அரசின் மெகா அறிவிப்பு !
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு இரண்டு மாதங்களுக்கான நிதியுதவியாக மொத்தம் ரூ. 5,000 வழங்கப்படும் என ஆளுநர் அறிவிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள (BPL - சிவப்பு நிற ரேஷன் கார்டு) குடும்பத் தலைவிகளுக்கு இரண்டு மாதங்களுக்கான நிதியுதவியாக மொத்தம் ரூ. 5,000 வழங்கப்படும் என்று ஆளுநர் கைலாஷ்நாதன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி, ஆளும் கட்சியினர் அதிரடியாக பல்வேறு திட்டங்களையும், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
அதன்படி தமிழக அரசு, கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 3,000 வழங்கியது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, ரேஷன் கார்டுக்கு ரூ. 3,000 ரொக்கம் மற்றும் ரூ. 750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்கியது.
இந்நிலையில் தமிழக அரசு, குடும்பத் தலைவிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உரிமைத் தொகை, தேர்தல் அறிவிப்பு வெளியானால் தடைப்படும் என்பதற்காக மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகை ரூ. 3,000 மற்றும் கோடைக்கால நிவாரணமாக ரூ. 2,000 சேர்த்து மொத்தம் ரூ. 5,000யை உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வங்கி கணக்கில் அதிரடியாக செலுத்தியது.
தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, புதுச்சேரி மக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த 1ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்த பிரதமர் அறிவிப்பார் என மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அதுகுறித்து பிரதமர் எதுவும் பேசாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதனை அறிந்த முதல்வர் ரங்கசாமி, நேற்று மாலை ஆளுநரை சந்தித்து, தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரி குடும்பத் தலைவிகளுக்கும் சிறப்பு நிதி வழங்க வலியுறுத்தினார். அதற்கு ஆளுநர் கைலாஷ்நாதன், நிதி ஆதாரமில்லை எனக் கூறினார்.
இந்நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு, தனது முகநூலில் இன்ப அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு ரேஷன் அட்டை காரர்களுக்கு 63 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு, அவர்களின் குடும்பத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அடுத்த 2 மாதங்களுக்கான மாதாந்திர நிதியுதவி (மாதம் ரூ. 2,500 வீதம்) மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகை, நேரடி நிதி பரிமாற்ற முறையில், எந்த தடையுமின்றி பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம் ஆளுநரை சந்தித்துப் பேசியபோது மூன்று கோப்புகளுக்கு அனுமதி கோரினார். அதில்:
- ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.
- கூடுதலாக 300 ஆஷா பணியாளர்கள் நியமனம்.
- வாரிசுகளுக்கு வேலை.
- ரேஷன் கார்டிற்கு சிறப்பு நிதி
நிதி ஆதாரமில்லை என கைவிரித்த ஆளுநர், கூடுதலாக 300 ஆஷா பணியாளர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். இதனால், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக ஆஷா பணியாளர்கள் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















