தனது வீட்டின் பட்டாவினை வேறொரு நபர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்துள்ள சாலையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன். கூலி தொழிலளியான இவர் அவரது தாய், மனைவி மற்றும் இரண்டு  குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 60 ஆண்டுக்காலமாக வசித்து வரும் இவர்களது வீட்டிற்கு பட்டா வழங்க மனு அளிக்கப்பட்டது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு பட்டா வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், வருவாய்  அதிகாரிகள் எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்த சேட்டு என்பவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவரது பெயரில் சிவபாலன் வீட்டை பட்டா வழங்கியுள்ளனர். இதனால் தற்போது சேட்டு என்பவர் இது தன்னுடைய வீடு என கூறி குடியிருக்க விடாமல் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், நேற்று  சிவபாலன் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி வெளியேற்றி உள்ளனர்.  மேலும், சிவபாலன் அவரது வீட்டிற்குள் செல்லாத வகையில் சேட்டு வேலி அமைத்து அராஜகத்தில் ஈடுப்பட்டுள்ளார்.


இதுகுறித்து 5 மாதங்களாக மாவட்ட ஆட்சியர், கோட்டாச்சியர் , வட்டாச்சியர் என அனைத்து அரசு துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் தங்களை அலைக்கழிக்க செய்வதாகவும் இதுக்குறித்து எடுத்துரைத்தும் அதிகாரிகளை கண்டுக்கொள்ளாத  மாவட்ட ஆட்சியரை மோகனை கண்டித்து  இன்று சிவபாலன்,  தாய் செல்வி, மனைவி தீபா 2 குழந்தைகளான ரியா (5) சினேகன் (3) ஆகியோர்களுடன் இன்று  ஆட்சியர் அலுவலகத்தில் குடிபெயர்ந்து குழந்தைகளோடு உணவு சாப்பிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டார். கூலி தொழிலாளி குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிபெயர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு நிலவியது.