விழுப்புரம்: "2026-லும் திமுக ஆட்சியே தொடரும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்; எடப்பாடி பழனிசாமி கனவு காண்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாது" என முன்னாள் அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான பொன்முடி தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு திமுக சார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்தார். இந்த நிகழ்வில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி கூறியதாவது:

உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கான சிறப்பான நாளாக திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆண்டுதோறும் வழங்கும் போல விழுப்புரத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வள்ளுவரின் புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும் என்ற எண்ணத்தோடும், அவருக்கு நிலைத்து இருக்கும் புகழினை நிலை நாட்ட வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளாக திருவள்ளுவரின் குரல்கள் தமிழக மக்கள் இன்றி உலக மக்களுக்கும் விழிப்புணர்வோடு இருப்பதாக தெரிவித்தார். 

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "2026-ல் அதிமுக ஆட்சி அமைவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பொன்முடி சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

அவர் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி கனவு காண்பதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அது அவரது உரிமை. ஆனால், தமிழக மக்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியதைப் போல, 2026-லும் திமுக ஆட்சிதான் தொடரும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்," என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் இப்போதே திமுக மற்றும் அதிமுக இடையே அரசியல் வார்த்தைப் போர் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது என்பதை இந்த மோதல் காட்டுகிறது.